‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ருக்மிணி வசந்த்… புதிய தமிழ்ப் படத்தில் ‘தாரா’வாக அறிமுகம்!
‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ருக்மிணி வசந்த், ‘கணம்’ திரைப்பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில், அவர் ‘தாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான பிரத்யேக அறிவிப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை, மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கின்றன. சாய் கிருஷ்ணா கட்வால் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீ கார்த்திக் முதன்முறையாக இணையும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
காலப்பயணத்தை மையமாகக் கொண்டு, தாய் – மகன் உறவின் உணர்வுப்பூர்வமான ஆழத்தைப் பேசிய ‘கணம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ கார்த்திக் தனது அடுத்த படைப்பின் மூலம் புதிய கதைக்களத்தையும் வித்தியாசமான கலைஞர்களின் கூட்டணியையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
படத்தின் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ள படக்குழு, ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் ‘தாரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதில், ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் ‘தாரா’ கதாபாத்திரத்திற்கான இறுதித் தேர்வில் ஈடுபடுகின்றனர். அப்போது எதிர்பாராத அறிவிப்பு ஒன்று அவர்களைத் திகைக்க வைக்கிறது. தொடர்ந்து ருக்மிணி வசந்த் அறிமுகமாகும் காட்சியுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. இதன் மூலம் படத்தின் உலகம் குறித்த முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது படக்குழு.
மேலும், படத்தின் அறிவிப்பை வெளியிடுவதிலும் புதுமையான அணுகுமுறையை மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கையாண்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் அந்நிறுவனம் எதிர்கொண்ட ஏற்றத்தாழ்வுகள், சவால்கள் மற்றும் அனுபவங்களை மையமாகக் கொண்டு, இன்ஸ்டாகிராமில் பிரத்யேகமாக வெளியிடப்படும் கற்பனை கலந்த ஆவணத் தொடரை உருவாக்கியுள்ளது. இதுவரை ஒன்பது அத்தியாயங்களைக் கடந்துள்ள இத்தொடர், நிஜ அனுபவங்களையும் கற்பனை வடிவிலான காட்சிகளையும் இணைத்து, இறுதியில் ருக்மிணி வசந்த் ‘தாரா’ கதாபாத்திரத்தில் நடிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
தேவ் ராம்நாத் மற்றும் ஸ்ரீ கார்த்திக் ஆகியோரால் தொடங்கப்பட்ட மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற தமிழ் இணையத் தொடரான ‘ஐ ஹேட் யூ – ஐ லவ் யூ’ மற்றும் விருதுகளை வென்ற குறும்படமான ‘சைல்ட்ஹுட் டைரீஸ்’ உள்ளிட்ட படைப்புகளின் மூலம் கவனம் பெற்றுள்ளது. தற்போது திரைப்படத் தயாரிப்பிலும் தனது பயணத்தை விரிவுபடுத்தி வருகிறது.
தயாரிப்பாளர் ஜஸ்வந்துடன் தொடர்புடைய சிருனி சினி கார்ப்பரேஷன், ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சி லா சோ’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அப்படம் சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘கீதா கோலா’, ‘காந்தா’ ஆகிய படங்களுடன் தொடர்புடைய சாய் கிருஷ்ணா கட்வாலும் இப்படத்தின் தயாரிப்புக் குழுவில் இணைந்துள்ளார்.
ருக்மிணி வசந்த் ‘தாரா’ கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சிந்தனைகளுடன் உருவாகும் இப்படம், அறிவிப்பு வெளியான முதலே திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
