மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE) திரைப்படம், வரும் அக்டோபர் 30ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை, டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் இப்படத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்றைய சமூகத்தில் இளைஞர்களைப் பாதிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம், மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்ற முக்கியமான சமூகக் கருத்துகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, செவிலியர்களின் சேவை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றுடன் சமூகத்தின் மீதான ஒவ்வொருவரின் பொறுப்பையும் வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்குடன் சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாகியுள்ள ‘செய் செய்யாதே’ திரைப்படம், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் டாக்டர் எஸ். ராஜா, டாக்டர் சந்திரபோஸ் என்ற கதாபாத்திரத்திலும், குரு விஜய், டாக்டர் விஜய் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தர்ஷினி ரெட்டி, டாக்டர் விஜயலட்சுமியாகவும், தபிதா குணரத்னே, டாக்டர் பிரியாவாகவும், மோனிகா ப்ரீத்தி, டாக்டர் மௌனிகாவாகவும் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரம் பிரதிக்ஷா மனோ பிரசாந்த், திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிதம்பரம் PDK, தங்கதுரை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வாசு பி. ராம்நாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜா முகமது படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். டாக்டர் எஸ். ராஜா மற்றும் ஹரிணி சுப்பு மியூசிக் டீம் இணைந்து இசையமைத்துள்ளனர். சண்டைக் காட்சிகளுக்கு ஸ்டண்ட் கார்த்திக் பயிற்சி அளித்துள்ளார்.
சமூக அக்கறை கொண்ட கருத்துகளுடன் உருவாகியுள்ள ‘செய் செய்யாதே’ திரைப்படம், அக்டோபர் 30 முதல் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.