துபாயில் சூர்யாவின் ‘சீன்’ படத்தின் பிரம்மாண்ட நிகழ்வு… டி.எஸ்.பி. இன்பராஜ் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

9

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வு துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், படத்தில் சூர்யா ஏற்றுள்ள டி.எஸ்.பி. இன்பராஜ் கதாபாத்திரம் தொடர்பான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. மேலும், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஜோதிகா – சூர்யா தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். கிரைம் த்ரில்லர், மர்டர் மிஸ்டரி மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் விளம்பரப் பயணத்தைத் தொடங்கும் வகையில், துபாயில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பிரத்யேக நிகழ்வில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், இயக்குநர் ஜித்து மாதவன், இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன் மற்றும் ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறார் ஜித்து மாதவன்!’ – சூர்யா

நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, இயக்குநர் ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தான் விரும்பியதாகவும், அவர் கதையைச் சொல்லத் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே சிரிக்கத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். முழுக் கதையையும் ரசித்துக் கேட்ட பிறகு, உடனடியாக இப்படத்தில் நடிக்க முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், “ஜித்து மாதவன் வழக்கம்போல இந்தப் படத்திலும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறார். நஸ்ரியா ‘மாயா’ என்ற கதாபாத்திரத்தில் தனது முழுமையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் நஸ்லென் இந்தப் படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமின் ரசிகன் நான். அவரும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்” என்றார்.

தனது 28 ஆண்டுகால திரைப்பயணத்தில் 48 படங்களை நிறைவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட சூர்யா, ‘சீன்’ படத்தின் அனுபவம் தனக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்தார். இப்படத்தை கிரைம் த்ரில்லர் அல்லது மர்டர் மிஸ்டரி என்று வகைப்படுத்தினாலும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குப் படமாகவும் இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்க்கும் சூர்யாவைத் திரையில் வெளிப்படுத்துவதுடன், இதுவரை வெளிப்படாத தனது பல்வேறு நடிப்புப் பரிமாணங்களையும் காட்ட விரும்புவதாகக் கூறினார். ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் நிபந்தனையற்ற அன்பும் மரியாதையும் தொடர்ந்து உழைக்கத் தூண்டுவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

‘ழகரம் ஸ்டுடியோஸ் புதிய திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும்!’ – சூர்யா

தனது தயாரிப்பு நிறுவனங்கள் குறித்துப் பேசிய சூர்யா, நண்பர் ராஜசேகர் பாண்டியனுடன் இணைந்து தொடங்கிய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தொடர்ந்து தரமான, ரசிகர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குப் படங்களைத் தயாரிக்கும் என்று தெரிவித்தார்.

அதேவேளையில், ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் புதிய மற்றும் இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அகரம் அறக்கட்டளையை சுமார் 20 ஆண்டுகளாக நிர்வகித்து வரும் ஜெயஸ்ரீ தாமோதரன், தற்போது ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தையும் நிர்வகிக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தப் புதிய முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், சமூக வலைதளங்களில் நல்ல விஷயங்களைப் பார்ப்பதன் மூலம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், நல்ல சிந்தனைகள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்தும் என்றும் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

‘12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கிறேன்!’ – நஸ்ரியா

நிகழ்வில் பேசிய நடிகை நஸ்ரியா நஜீம், துபாயில் பிறந்து வளர்ந்து படித்த தனக்குத் மீண்டும் அங்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தன் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ஜித்து மாதவனுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்றும், நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் மனம் விட்டுச் சிரித்து மகிழ்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

‘எனது முதல் தமிழ்ப் படம் என்பதால் இந்த நிகழ்வு சிறப்பானது!’ – நஸ்லென்

தமிழில் அறிமுகமாகும் நடிகர் நஸ்லென் பேசுகையில், சூர்யா போன்ற ஒரு நட்சத்திரத்துடன் இணைந்து நடிப்பது தனது நீண்ட நாள் கனவு நனவானது போன்ற அனுபவத்தை அளித்ததாகக் கூறினார். முதல் நாள் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பதற்றத்தையும், சூர்யாவுடன் பணியாற்றிய மகிழ்ச்சியையும் நினைவுகூர்ந்தார். இப்படத்தில் தான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

‘தமிழ் – மலையாள சினிமா என்ற வேறுபாடு இப்போது இல்லை!’ – ஜித்து மாதவன்

இயக்குநர் ஜித்து மாதவன் பேசுகையில், துபாயில் மலையாளிகள் அதிகம் இருந்தாலும், தமிழில் படத்தை இயக்கியிருப்பதால் தமிழிலேயே பேச விரும்புவதாகக் குறிப்பிட்டார். சூர்யா கதையைக் கேட்ட ஐந்து நிமிடங்களிலேயே சிரிக்கத் தொடங்கியது, அவருக்குக் கதை பிடித்துவிட்டதை உணர்த்தியதாகத் தெரிவித்தார்.

தற்போது மொழிகளைக் கடந்து ரசிகர்கள் அனைத்துத் திரைப்படங்களையும் ரசித்துப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், கேரளாவில் தமிழ்ப் படங்களுக்கும், தமிழகத்தில் மலையாளப் படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார். எனவே, ‘சீன்’ திரைப்படமும் மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

‘சீன்’ – நவம்பர் 6 முதல் திரையரங்குகளில்!

நிகழ்வில் பேசிய இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன், ழகரம் ஸ்டுடியோஸ் சூர்யாவின் கனவை நனவாக்கும் முயற்சி என்றும், ‘சீன்’ திரைப்படம் அந்த நிறுவனத்தின் முதல் படைப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தின் மூலம் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளதாகவும், படத்தின் வெளியீட்டுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார்.

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ராஜசேகர் பாண்டியன், ‘சீன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு நல்ல திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றும், சூர்யாவை இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்கள் காண்பார்கள் என்றும் தெரிவித்தார்.

சூர்யா – நஸ்ரியா – நஸ்லென் கூட்டணி, ஜித்து மாதவனின் இயக்கம் மற்றும் சுஷின் ஷ்யாமின் இசை எனப் பல சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. துபாயில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.