“‘லவ் இங்க்’ படத்தில் வில்லனாக இணைந்த சுனில் ரெட்டி… இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தீவிரம்!”

6

எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ‘லவ் இங்க்’ படத்தில் நடிகர் சுனில் ரெட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ் அய்யப்பா மற்றும் டெல்னா டேவிஸ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியுள்ளார். ஏ. மகேந்திரன் வழங்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சுனில் ரெட்டி தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இன்றைய இளம் தலைமுறையினரின் காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு ‘லவ் இங்க்’ திரைப்படம் உருவாகி வருகிறது. நகைச்சுவை, காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் நவீன காதலை ரசிக்கத்தக்க வகையில் சொல்லும் படமாக இது அமையும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இளைஞர்களை மட்டுமின்றி, குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையிலும் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சுனில் ரெட்டி, ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்டிமன்றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா, கேபிஒய் வினோத், மௌரிஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் குறித்துப் பேசிய இயக்குநர் மேகராஜ் தாஸ், “இன்றைய ஜென்ஸீ தலைமுறையினருக்குப் பிடித்த படமாக ‘லவ் இங்க்’ நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். ரசிகர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும். இளைஞர்களை மட்டுமல்லாமல், குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து, கொண்டாடக்கூடிய படமாகவும் ‘லவ் இங்க்’ இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் நடைபெற்றது. தற்போது மீண்டும் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததும் பின்னணி தயாரிப்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் படத்தை வெளியிடப் படக்குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

ஏ. மகேந்திரன் வழங்கும் இப்படத்தை எம்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தரண் குமார் இசையமைக்கிறார். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவையும், ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். புவன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

காதல், நகைச்சுவை மற்றும் இன்றைய தலைமுறையின் உறவுகளை மையமாகக் கொண்ட ‘லவ் இங்க்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.