ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் ‘கெவி’! 400 ஆண்டுகால வரலாற்றில் வெள்ளகெவி கிராமத்திற்குக் கிடைத்த முதல் ரேஷன் கடை!
கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகெவி கிராமத்தின் 400 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அரசு ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளதை, ‘கெவி’ திரைப்படக் குழுவினர் தங்களது ‘மலை கீதம்’ பாடல் மூலம் கொண்டாடியுள்ளனர். 98-வது ஆஸ்கார் விருதுகளுக்கான பரிசீலனைத் தகுதிப் பட்டியலில் (Oscar Consideration Ballot) இடம்பிடித்து உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இப்படம், தற்போது ஒரு முக்கியமான சமூக மாற்றத்துடனும் பேசுபொருளாகியுள்ளது.
ஆர்டப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பனி (Artuptriangles Film Kampany) தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தின் ‘மலை கீதம்’ பாடலுக்கு, இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா தனது குரலை வழங்கியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். வெள்ளகெவி கிராம மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தையும், அவர்களுக்குக் கிடைத்துள்ள இந்த முக்கியமான வெற்றியையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
சாலை வசதிக்காகத் தொடரும் போராட்டம்
இதுகுறித்து படத்தின் இயக்குநர் தமிழ் தயாளன் கூறுகையில், வெள்ளகெவி கிராம மக்களுக்கு முறையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே தங்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அந்த அடிப்படை உள்கட்டமைப்பு வசதிக்காகத் தொடர்ந்து காத்திருக்கும் சூழலில், கிராமத்தின் 400 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அரசு ரேஷன் கடையைக் கொண்டுவர முடிந்திருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சாலை வசதியை எதிர்பார்த்துப் போராடிய நிலையில், குறைந்தபட்சம் கிராம மக்களுக்கான ரேஷன் கடையையாவது கொண்டுவர முடிந்திருப்பது கொண்டாடப்பட வேண்டிய வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் ஒலிக்கும் மலைவாழ் மக்களின் குரல்
எளிய மலைவாழ் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் ஆஸ்கார் தகுதிப் பட்டியல் மூலம் உலக அரங்கிலும் கவனம் பெறுவது பெருமைக்குரிய தருணம் எனத் தமிழ் தயாளன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், தேவா மற்றும் வைரமுத்து போன்ற திரையுலகின் முக்கிய ஆளுமைகள் தங்களது குரல் மற்றும் பாடல் வரிகள் மூலம் வெள்ளகெவி மக்களின் வலியையும் வெற்றியையும் வெளிப்படுத்தியிருப்பது ஒரு படைப்பாளியாகத் தனக்குக் கிடைத்த பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத்தின் வெற்றியைக் கடந்து, ஒரு கிராமத்தின் அடிப்படைத் தேவைக்கான போராட்டத்தையும் அதில் கிடைத்துள்ள முன்னேற்றத்தையும் கொண்டாடும் ‘கெவி’ படக்குழுவின் இந்த முயற்சி கவனம் ஈர்த்துள்ளது.