ராப் இசைக் கலைஞர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்ட பால் டப்பா, சுயாதீன இசை உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்து வருகிறார். இவர் வெளியிடும் இசை ஆல்பங்கள் டிஜிட்டல் தளங்களில் அதிகமான பார்வைகளைப் பெற்று கவனம் ஈர்த்து வரும் நிலையில், தற்போது அவர் எழுதி, பாடி, நடித்துள்ள ‘ஏரோபிளேன்’ (Aeroplane) என்ற புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியாகியுள்ளது. இதனை திங்க் இன்டி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பால் டப்பா – அனன்யா ராம் பிரசாத் கூட்டணி
‘ஏரோபிளேன்’ மியூசிக் வீடியோவில் பால் டப்பாவுடன் நடிகை அனன்யா ராம் பிரசாத் இணைந்து நடித்துள்ளார். ராகுல் அசோக் குமார் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு அடியேல் மஸார் (Adiel Massar) இசையமைத்துள்ளார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“காதல் வேணாம்னு சொன்னா காதல் பண்ண சொன்னாயே…” எனத் தொடங்கும் இப்பாடலைப் பால் டப்பா எழுதி, பாடியுள்ளார். காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் காதலர்களின் உணர்வுகளையும், அவர்களுக்குள் எஞ்சியிருக்கும் காதல் நினைவுகளையும் மையமாகக் கொண்டு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரேக்கப்புக்குப் பிறகான காதல் நினைவுகள்!
ஆகாய விமானத்தில் பயணிக்கும் பயணிகளாகக் காதலர்கள் இருவரும் பிரிவுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதும், அந்தச் சந்திப்பில் பழைய காதல் நினைவுகள் இசையுடன் மீண்டும் உயிர்பெறுவதும் இப்பாடலின் காட்சியமைப்பில் இடம்பெற்றுள்ளன. பால் டப்பா மற்றும் அனன்யா ராம் பிரசாத்தின் திரைத் தோற்றமும், இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் பாடலுக்கு மேலும் ஈர்ப்பைச் சேர்த்துள்ளன.
காதல் தோல்வியின் வலியையும், பிரிவுக்குப் பிறகும் மனதில் தங்கியிருக்கும் நினைவுகளையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இப்பாடல், காதல் தோல்வியைச் சந்தித்தவர்களுடன் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் உருவாகியுள்ளது.
சிங்கிள் பாய்ஸ்களின் விருப்பப் பாடலாகுமா?
காதல் தோல்வியை மையமாகக் கொண்ட பாடலாக மட்டுமின்றி, பிரிவுக்குப் பிறகு மனதைத் தேற்றிக்கொள்ளும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதால் ‘ஏரோபிளேன்’ பாடல் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, காதல் தோல்வியைச் சந்தித்தவர்களுக்குப் பொருத்தமான வரிகளைக் கொண்டிருப்பதால், இணையத்தில் சிங்கிள் பாய்ஸ்களின் ஸ்டேட்டஸாகவும் இப்பாடல் மாறி வருகிறது.
சுயாதீன இசை உலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் பால் டப்பாவின் இந்தப் புதிய முயற்சி, காதல் தோல்விப் பாடல்களை விரும்பும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

