‘வேட்ட சாமி’ படத்தின் முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியீடு – வில்லிசைக் கலைஞர் மாதவி பின்னணிப் பாடகியாக அறிமுகம்!
‘பம்பர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘வேட்ட சாமி’. இப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ அக்டோபர் 30-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்பாடலின் முக்கியமான சிறப்பம்சம், தென் தமிழகத்தின் திருவிழாக்களிலும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளிலும் தனது காந்தக் குரலாலும் வில்லுப்பாட்டு இசையாலும் மக்களைக் கவர்ந்த வில்லிசைக் கலைஞர் மாதவி, முதன்முறையாகத் திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியிருப்பதுதான். அவரது கம்பீரமான குரலில் ஒலிக்கும் இப்பாடல், கிராமத்துக் கோவில் திருவிழாவின் தெய்வீக உணர்வையும் பக்திப் பரவசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாரம்பரியமிக்க நாட்டுப்புற இசையில் இப்படத்திற்காக மொத்தம் ஏழு பாடல்கள் உருவாகியுள்ளன. அவற்றில் ஒன்றான ‘சாமி அழைப்பு’ பாடல், திருவிழா மேளதாளங்கள் மற்றும் தெய்வ வழிபாட்டின் உற்சாகத்தை ரசிகர்களுக்கு உணர்த்துகிறது. ‘தாய் கிழவி’, ‘ஜாலியோ ஜிம்கானா’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் கவனம் பெற்ற பாடலாசிரியர் மு. ஜெகன் கவிராஜ், ‘வீரம் பாயும் நெல்லையிலே…’ எனத் தொடங்கும் இப்பாடலின் கம்பீரமான வரிகளை எழுதியுள்ளார்.
7 MILES PER SECOND Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இப்படத்தில் அருள்நிதி, அமீர் ஆகியோருடன் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி மற்றும் நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். தென் தமிழகத்தின் பண்பாடு, வீரம் மற்றும் மக்களின் ஆழமான தெய்வ நம்பிக்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் பாடல்களுக்கான உரிமையை PRIME9 MUSIC நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதம் ‘வேட்ட சாமி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், வில்லிசைக் கலைஞர் மாதவியின் குரலில் வெளியாகியுள்ள ‘சாமி அழைப்பு’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.