இரண்டாம் உலகப்போர் பின்னணியில் உருவாகும் ‘டெத் ரயில்வே’ – ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வெளியீடு!

9

‘யாத்திசை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன், தனது இரண்டாவது திரைப்படமான ‘டெத் ரயில்வே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளைத் தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் இப்படம், அதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1944-ம் ஆண்டு வரலாற்றுப் பின்னணியில் ஒரு போர் கதை!

இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்திருந்த 1944-ம் ஆண்டில், ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை மையமாகக் கொண்டு ‘டெத் ரயில்வே’ உருவாகியுள்ளது. இந்தியா தனது சொந்த மண்ணில் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், தொலைதூர எல்லைகளில் இந்திய வீரர்கள் எதிர்கொண்ட அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தின் அதிகம் அறியப்படாத வரலாற்றுப் பக்கங்களை இப்படம் திரையில் கொண்டு வருகிறது.

போர்க்களத்தின் தீவிரத்துடன் உணர்வுப்பூர்வமான காதலையும் இணைத்துச் சொல்லும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள், படத்தின் கதைக்களம் மற்றும் காலகட்ட உலகம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

சசிகுமார் – அசோக் செல்வன் இணையும் நட்சத்திரக் கூட்டணி!

இப்படத்தில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார்.

‘யாத்திசை’ படத்தின் மூலம் வரலாற்றுப் பின்னணியைப் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடனும் தனித்துவமான கதை சொல்லல் முறையுடனும் திரையில் கொண்டு வந்த தரணி ராசேந்திரன், தற்போது விரிவான களத்துடன் ‘டெத் ரயில்வே’ படத்தை உருவாக்கியுள்ளார். வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள், அந்தக் காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்காகப் படக்குழுவினர் மேற்கொண்டுள்ள நுணுக்கமான உழைப்பை வெளிப்படுத்துகின்றன.

தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு!

ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கும் இப்படத்தை தரணி ராசேந்திரன் எழுதி இயக்குகிறார். சர்தக் கல்யாணி இசையமைக்க, ஏ.சி. சார்லஸ் ராஜ் கூடுதல் இசையமைத்துள்ளார். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.

மாலதி நாராயணன் இணை இயக்குநராகவும், வீரமணி கணேசன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், லிவி ஜேம்ஸ் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். சண்டைப் பயிற்சியை மிரட்டல் செல்வா மேற்கொண்டுள்ளார். சரவணன் ராமச்சந்திரன் ஒலி வடிவமைப்பையும், கே.சி. பூபதி ராஜா ஒலி கலவைப் பணிகளையும் கவனிக்கின்றனர்.

விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணராக டி.எஸ். ஹரி ஹர சுதீன் பணியாற்ற, விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்களாக பி.ஜே. ஆகாஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளனர். பாடல்களை நெய்தல் எழுத, ஆடை வடிவமைப்பை ஸ்ரீ நிஷா மேற்கொண்டுள்ளார். பராஜிதர் கலரிஸ்டாகப் பணியாற்றியுள்ளார்.

குமரன் கே. புகைப்படக் கலைஞராகவும், நாகராஜ் செல்வம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், திருநீலகண்டன் ஜி. தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர்.

வரலாற்றின் அதிகம் அறியப்படாத ஒரு பக்கத்தைப் போர், காதல் மற்றும் உணர்வுகளுடன் சொல்லத் தயாராகும் ‘டெத் ரயில்வே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.