‘சிக்னல் அட் 11:30’ படத்திற்கு டி. இமானின் இசை மிகப்பெரிய பலம் – விழாவில் திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு!
மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விழாவில் திரையுலகப் பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு படத்தை வாழ்த்திப் பேசினர்.
பெண் இயக்குநரின் முயற்சிக்குப் பாராட்டு!
இணைத் தயாரிப்பாளர் ஷிவானி சுப்ரமணி பேசுகையில், “இயக்குநர்கள் பேரரசு மற்றும் ஆர்.வி. உதயகுமார் ஆகியோரின் படங்களைப் பார்த்துதான் எனக்குச் சினிமா மீது ஆர்வம் வந்தது. தனஞ்செயன் சாருடன் பேசும்போதெல்லாம் நேர்மறையான உணர்வு கிடைக்கும். டி. இமான் எங்கள் படத்திற்குப் பெரும் பலம். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். இயக்குநராக என் அம்மா இந்தப் படத்தைச் சிறப்பாக இயக்கியுள்ளார். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்” என்றார்.
கலை இயக்குநர் முனி கிருஷ்ணன், “படம் சிறப்பாக வந்துள்ளது” என்று தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் ராஜா, “படத்தில் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்” என்றார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், “படத்தின் முழுக் கதையும் எனக்குத் தெரியாது. நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே தெரியும். ஆனால், இப்போது டிரெய்லரைப் பார்க்கும்போது அற்புதமாக வந்துள்ளது என்பது தெரிகிறது. சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை இயக்குநர் தேர்வு செய்துள்ளார். தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
வித்தியாசமான சுவாரஸ்யமான படம் – தனஞ்செயன்!
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் வேறு துறையிலிருந்து இயக்குநர் மலர்விழி சினிமாவுக்கு வந்திருக்கிறார். படத்தைப் பார்த்தேன். வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. சமீபகாலமாகத் தமிழில் நல்ல படங்கள் வெளியாகி வருகின்றன. அவற்றுக்கு நல்ல வசூலும் கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் இந்தப் படமும் இணைய வேண்டும். தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தமிழக அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். அவை ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “தமிழ் சினிமாவை நம் அன்றாட வாழ்விலிருந்து பிரிக்க முடியாது. அதனால்தான் இங்கிருந்து முதலமைச்சர்கள்கூட உருவாகிறார்கள். வேறு துறையிலிருந்து சினிமாவுக்கு வந்துள்ள இயக்குநர் மலர்விழி மற்றும் அவரது மகளுக்கு வாழ்த்துகள். இந்தப் படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும். இப்படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய அனைவரும் மிகப்பெரிய இடத்திற்குச் செல்ல வேண்டும்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “பள்ளிக்கூடம் நடத்தும் ஒருவர் திரைப்படம் எடுக்கிறார் என்றால், நிச்சயம் நல்ல கதையைச் சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இயக்குநர் மலர்விழி மீது அந்த நம்பிக்கை உள்ளது. இளையராஜாவுக்கு அடுத்து மனதைத் தொடும் இசையைத் தருபவர் இமான். சந்தோஷ் பிரதாப் மற்றும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் என்பதை டிரெய்லர் காட்டுகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
சிறிய படங்களுக்குத் திரையரங்க ஆதரவு அவசியம்!
படத்தொகுப்பாளர் கலைவாணன் பேசுகையில், “சிறிய படங்கள்தான் என்னைப் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களை வாழ வைக்கின்றன. அவர்களை வாழ்த்தவில்லை என்றாலும் பாதுகாக்க வேண்டும். இதை வலியுறுத்தவே இங்கு வந்துள்ளேன். மலர்விழி மேடம் மிகவும் கஷ்டப்பட்டுப் படத்தை உருவாக்கியுள்ளார். படத்தைத் திரையரங்குகளில் பார்த்துக் கொண்டாடுங்கள்” என்றார்.
பாடலாசிரியர் மோகன்ராஜா, “இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜோஜோ’ பாடலை நான்தான் எழுதியுள்ளேன். மனதுக்கு நிறைவான பாடல் இது. இமானுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இந்த வாய்ப்புக்கு நன்றி. இயக்குநர் மலர்விழி மேடமும் நானும் சென்னையில் ஒரே பகுதியில் வசிப்பவர்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்றார்.
‘பிளாஸ்ட்’ பட இயக்குநர் சுபாஷ் பேசுகையில், “இயக்கத்தையும் தயாரிப்பையும் ஒருவரே மேற்கொள்கிறார் என்ற செய்தியைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. இந்த உழைப்புக்காகவே படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். கடினமாக உழைக்கும் சந்தோஷ் பிரதாப் இன்னும் பெரிய இடத்திற்குச் செல்ல வேண்டும். இமானின் இசை அருமையாக உள்ளது. இந்தப் படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவும் தேவை” என்றார்.
நடிகர் விதார்த் பேசுகையில், “சந்தோஷ் பிரதாப் மிகவும் மென்மையானவர். எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அவருக்காகவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். தனஞ்செயன் சார் படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் என்றால், படம் நிச்சயம் பிரமாதமாக வந்திருக்கும். எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் இமானின் ஆதரவும் இந்தப் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
நடிகர், நடிகைகள் பகிர்ந்த அனுபவங்கள்!
நடிகை பவ்யா திரிகா பேசுகையில், “எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மலர்விழி மேமுக்கு நன்றி. அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். சந்தோஷ் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இமான் சாரின் இசை அற்புதமாக உள்ளது. ‘ஜோஜோ’ பாடல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானது. இது வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
நடிகை புஜிதா பொன்னாடா பேசுகையில், “’சிக்னல்’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். வாய்ப்பு கொடுத்த மலர் மேமுக்கு நன்றி. சந்தோஷ் மிகவும் திறமையான, நேர்மறையான சக நடிகர். பவ்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால், அவரை எனக்கு முன்பே தெரியும். இமான் சாரின் இசை மேஜிக். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசுகையில், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கிய மலர் மேமுக்கு நன்றி. நாங்கள் அனைவரும் இந்தப் படத்தின் கிரீடம் என்றால், அதன் மேல் இருக்கும் வைரம் இசையமைப்பாளர் இமான் சார்தான். அவருடைய பாடலுக்கு நடனமாடியது மகிழ்ச்சி. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன் என்றால், அது ‘சிக்னல்’ படத்தில்தான். பெண்கள் இன்று சமூகத்தின் பல துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. பல தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்த்துத் தாண்டி வர அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மலர்விழி மேடம் இன்னும் பெரிய இடத்திற்குச் செல்வார். இந்தப் படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவும் தேவை” என்றார்.
“பெண் இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இசையமைத்தேன்” – டி. இமான்!
இயக்குநர் மலர்விழி நடேசன் பேசுகையில், “இது என்னுடைய இரண்டாவது படம். நான் ரசித்த படங்களை இயக்கிய ஆர்.வி. உதயகுமார் சார், பேரரசு சார் உள்ளிட்ட பலரின் படங்களுக்கு நான் ரசிகை. இன்று அவர்கள் என் படத்தின் விழாவிற்கு வந்து வாழ்த்துவது கனவு நனவான தருணம். தனஞ்செயன் சாருக்குப் படம் பிடித்திருந்தது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. ஒரு படத்திற்கு இசை மிக முக்கியம் என்பது என் எண்ணம். இந்தப் படத்திற்கு இமான் சாரின் இசை மிகப்பெரிய பலம். படம் சிறப்பாக உருவாக அவருடைய பங்களிப்பு முக்கியமானது. அவருக்கு நன்றி. சந்தோஷ், புஜிதா, பவ்யா மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
இறுதியாக இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், “இந்தப் படத்தின் கதையைத் தாண்டி, ஒரு பெண் இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்திற்காகவே இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். கல்வியாளர் ஒருவர் இயக்குநராகச் சினிமாவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். சந்தோஷ் பிரதாப் நிச்சயம் பெரிய இடத்திற்குச் செல்வார். கதாநாயகிகள் அழகாக நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ள விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்” என்றார்.
வித்தியாசமான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக்களம், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பு மற்றும் டி. இமானின் இசை எனப் பல சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படம், படக்குழுவினரின் நம்பிக்கையுடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.













