காதலும் நகைச்சுவையும் கலந்த காளிதாஸ் ஜெயராமின் புதிய படம் – ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns). காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது.
காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள், உறவுகள் மற்றும் அவர்கள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை நகைச்சுவை, காதல், இசை ஆகிய அம்சங்களுடன் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படைப்பாக ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ உருவாகியுள்ளது. கடந்து வந்துவிட்டதாக நினைக்கும் சில உறவுகளும், இன்னும் முடிவடையாத சில வாழ்க்கை அத்தியாயங்களும் நம் நினைவுகளில் தொடர்ந்து பயணிப்பதை இப்படம் பேசுகிறது.
இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், லட்சுமி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா மற்றும் ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஹம்மது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தின் கதையை அஹம்மது கபீர் எழுதியுள்ளார். ஜாபின் ஜான் மற்றும் அஹம்மது கபீர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். விஷ்ணு கோவிந்த் ஒலிப்பதிவுப் பணியையும், மஷார் ஹம்சா ஆடை வடிவமைப்பையும், ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனைப் பணியையும் மேற்கொண்டுள்ளனர். அனு விஸ்வநாதன் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
‘ஜூன்’ (2019), ‘மதுரம்’ (2021) ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஹம்மது கபீர், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘கேரளா கிரைம் ஃபைல்ஸ்’ இணையத் தொடரின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களையும் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’, காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் பழைய நினைவுகளை மையமாகக் கொண்ட வித்தியாசமான ரொமாண்டிக் காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். தமிழ் ரசிகர்களிடம் பல்வேறு திரைப்படங்களைக் கொண்டு சேர்த்து வரும் ரோமியோ பிக்சர்ஸ், இப்படத்தையும் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகிறது.
