தயாரிப்பாளர்களின் நிலுவை மானியம், ஆறு காட்சிகளுக்கு அனுமதி – முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

10

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், முன்னாள் செயலாளர்களான ஏ.எல். அழகப்பன், டி. சிவா, முன்னாள் பொருளாளர்களான கஹஜாமைதீன், சந்திரபிரகாஷ் ஜெயின், வி.சி. குகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், கமிலா நாசர், சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சங்கத்தின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை!

கூட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி, தயாரிப்பாளர்களின் நலன் மற்றும் சங்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சங்கத்தின் முன்னேற்றத்திற்கும் தயாரிப்பாளர்களின் நலனுக்கும் உதவும் வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளும் ஆலோசனைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

தமிழக முதலமைச்சர் மற்றும் செய்தித்துறை அமைச்சருக்கு நன்றி!

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு நிலுவையில் இருந்த மானியத் தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், பண்டிகைக் காலங்களில் வெளியாகும் திரைப்படங்களை ஒரு வாரத்திற்கு ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளித்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளில் முக்கியமான இந்த நடவடிக்கைகளுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர்களின் நலன் மற்றும் தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சியை முன்னிறுத்தி நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் கூட்டம், சங்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகளுக்கான முக்கிய ஆலோசனைக் களமாக அமைந்தது.