கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் கதையில் உருவான ‘வயலெட் கனவு’ – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில்!

9

கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில், இயக்குநர் பி. நித்தியானந்தம் இயக்கியுள்ள உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘வயலெட் கனவு’, நாளை (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது. திக்… திக்… திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

ஹாலிவுட் எழுத்தாளர்களின் படைப்புகளைப் போன்று விறுவிறுப்பான திருப்பங்களுடன் தனது நாவல்களை உருவாக்கும் திறன் கொண்டவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். அவரது புகழ்பெற்ற நாவலை அதன் சுவை மாறாமல் திரைமொழியில் கொண்டுவரும் முயற்சியாக ‘வயலெட் கனவு’ உருவாகியுள்ளது. கதையின் அடிப்படை அம்சங்களில் பெரிய மாற்றங்களைச் செய்யாமல், பார்வையாளர்களை மிரள வைக்கும் உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் பி. நித்தியானந்தம். அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் மற்றும் ஏ. முஸ்தரி இணைந்து தயாரித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் பி. நித்தியானந்தம் கூறுகையில், “ஆபாவாணன் சார், நானும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். பின்னர் அவருடன் பணியாற்றினேன். அதன் பிறகு திரைப்படங்களை இயக்கத் தொடங்கினேன். தொலைக்காட்சித் தொடர்களில் அதிகம் கவனம் செலுத்தியதால் திரைப்பட இயக்கத்தைத் தொடர முடியவில்லை. ராஜேஷ்குமார் சாரின் சில நாவல்களை ஓடிடி மற்றும் யூடியூப் சேனல்களுக்காகச் சிறிய அளவிலான படங்களாக இயக்கியிருந்தேன். அவற்றைப் பார்த்த தயாரிப்பாளர் பாபு தூயவன், இதுபோன்ற ஒரு திரைப்படத்தை இயக்கித் தருமாறு கேட்டுக்கொண்டார். அதைவிடப் பெரிய அளவில் படத்தை உருவாக்கலாம் என்று முடிவு செய்து இந்தப் படத்தைத் தொடங்கினோம்.

இது ஓர் உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர். ராஜேஷ்குமார் சாரின் நாவல்களைப் படிக்கும்போதே ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். அந்த வகையில், அவரது கதை மற்றும் திரைக்கதையில் பெரிய மாற்றங்கள் செய்யாமல் இப்படத்தை இயக்கியிருக்கிறேன். கடும் போட்டிக்கு மத்தியில் நவம்பர் 20ஆம் தேதி படத்தை வெளியிடுகிறோம். மற்ற படங்கள் வெளியாகின்றன என்பதற்காக ஒவ்வொரு வாரமும் காத்திருந்தால் நம்முடைய படத்தை வெளியிட முடியாது. எங்கள் படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பாடல்கள், ஆக்‌ஷன் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த, அதே நேரத்தில் ரசிகர்களை மிரள வைக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக ‘வயலெட் கனவு’ இருக்கும்” என்றார்.

படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் பேசுகையில், “ஆபாவாணன் சார், நானும் இயக்குநர் நித்தியானந்தமும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். பின்னர் தனித்தனியாகப் படங்களை இயக்கத் தொடங்கினோம். நித்தியானந்தம் தொலைக்காட்சித் தொடர்களை இயக்குவதில் பிஸியாகிவிட்டார். என்னைத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகராக அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். அவர் கொடுத்த வாய்ப்பின் மூலம்தான் இன்று பல தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன்.

‘வயலெட் கனவு’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படம் முழுவதும் சஸ்பென்ஸ் நிறைந்திருப்பதால் எனது கதாபாத்திரம் குறித்து விரிவாகப் பேச முடியாது. திரைக்கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் கதாபாத்திரம் இது. ராஜேஷ்குமார் சாரின் கதை, திரைக்கதையை நித்தியானந்தம் மிகச் சிறப்பாகக் கையாண்டு இயக்கியிருக்கிறார். படம் நிச்சயம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். தற்போதைய சூழலில் சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகளும், சரியான நேரத்திலான காட்சிகளும் கிடைப்பதில்லை. இதனால் பல நல்ல படங்கள் ரசிகர்களைச் சென்றடையாமல் போய்விடுகின்றன. இந்தச் சூழலில் ‘வயலெட் கனவு’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பத்திரிகையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

படத்தின் நாயகன் விவந்த் விவின் பேசுகையில், “ரேடியோ மற்றும் வீடியோ ஜாக்கியாக எனது பயணத்தைத் தொடங்கினேன். பின்னர் டப்பிங் கலைஞராகவும், மாடலாகவும் பணியாற்றி தற்போது நடிகராகப் பயணித்து வருகிறேன். இதற்கு முன்பு ‘இருக்கு ஆனா இல்ல’, ‘ஏகாந்தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தேன். தற்போது ‘வயலெட் கனவு’ படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது எனது சினிமா பயணத்தில் முக்கியமான அனுபவம். ராஜேஷ்குமார் சாரின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் இது எனக்கு மிகவும் ஸ்பெஷல்.

நாயகனுக்கு அடிக்கடி ஒரே மாதிரியான கனவு வருகிறது. அந்தக் கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்திலும் நடந்துவிடுமோ என்ற அச்சம் அவரை உளவியல் ரீதியாகப் பாதிக்கிறது. அதே நேரத்தில் அவரைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்களும் அவருக்கு மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றின் பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் பதில் சொல்வதுதான் இப்படத்தின் கதை. உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒருவராக நடிப்பது சவாலாக இருந்தது. பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரம் என்பதால் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறேன்” என்றார்.

படத்தின் நாயகி ரெய்னா கரட் பேசுகையில், “’அங்காரகன்’ எனது முதல் படம். ‘வயலெட் கனவு’ இரண்டாவது படம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைக்கதையில் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ராஜேஷ்குமார் சாரின் கதை, திரைக்கதை என்றதும் எனது நண்பர்களே ஆச்சரியப்பட்டார்கள். அவரது கதையில் உருவாகும் படத்தில் நடிப்பது எனக்குப் பெருமையாக இருந்தது. இப்படம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை அப்போதே ஏற்பட்டது.

இது பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த படம். எனது கதாபாத்திரத்தின் பின்னணியிலும் நிறைய சஸ்பென்ஸ் இருக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்ததும் நாயகனைத் திருமணம் செய்துகொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும் எனது கணவருக்கும் இடையே ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகள் கதையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அது தொடர்பான காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும்” என்றார்.

ஜி. கிதாகரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜெகன் கல்யாண் இசையமைத்துள்ளார். ஏ.எம். சைப் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ராஜேஷ்குமாரின் பிரபலமான நாவல், விறுவிறுப்பான உளவியல் பின்னணி, எதிர்பாராத திருப்பங்கள் எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘வயலெட் கனவு’ திரைப்படம் நாளை (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது.