அப்பா குட்டி – விமர்சனம்

141

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘அப்பா குட்டி’, அப்பா – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் குடும்ப உணர்வுப்பூர்வமான திரைப்படம். ஆக்‌ஷன், காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் எனப் பல அம்சங்களைக் கலந்து ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.

சென்னையில் சில பிரச்சினைகளில் சிக்கிய சூர்யா (விஜய் ஆண்டனி), தனது மகள் தியாவுடன் ஊட்டிக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். மகளுக்காகவே வாழும் சூர்யா, அவளது ஒவ்வொரு தேவையையும் கவனித்துக்கொண்டு அன்பான தந்தையாக இருக்கிறார். தியாவின் பள்ளி ஆசிரியையான அனிதா (ப்ரீத்தி அஸ்ரானி), சூர்யாவின் அன்பையும் பொறுப்பையும் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால், சூர்யாவின் கடந்தகாலம், தியாவின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சிக்கல்கள் எனக் கதை வேறு திசையில் பயணிக்கத் தொடங்குகிறது. மகளுக்காக சூர்யா எடுக்கும் முடிவுகளும், அவளைக் காப்பாற்ற அவர் நடத்தும் போராட்டமும்தான் படத்தின் மீதிக்கதை.

விஜய் ஆண்டனி தனக்கே உரிய அமைதியான நடிப்பில் சூர்யா கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். மகளிடம் காட்டும் பாசம், அவளுக்காகத் தவிக்கும் தருணங்கள், நெருக்கடியான சூழலில் வெளிப்படும் கோபம் எனத் தனக்குப் பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அதேநேரத்தில், அவருடைய முந்தைய படங்களில் பார்த்த சில முகபாவனைகளும் நடிப்பு பாணியும் இங்கும் தொடர்வதால் புதுமை குறைவாகத் தெரிகிறது. சிறுமி லிதன்யா துறுதுறுப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கதையின் உணர்ச்சியைத் தாங்கிச் செல்லும் முக்கியப் பொறுப்பை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். ப்ரீத்தி அஸ்ரானி தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். முருகானந்தம் பல இடங்களில் தனது நகைச்சுவையால் படத்துக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுக்கிறார். பகவதி பெருமாள், வேட்டை முத்துக்குமார் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதியில் அப்பா – மகள் பாசம், அனிதாவின் காதல், சூர்யாவின் வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை நிறுவுவதற்காக அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சில நகைச்சுவைக் காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்குச் சிரிப்பை வரவழைக்கவில்லை. குறிப்பாக, சில இடங்களில் காட்சிகளும் வசனங்களும் இயல்பை மீறி அமைந்திருப்பதால் திரைக்கதையின் வேகம் பாதிக்கப்படுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு கதை வேகமெடுக்கிறது. சூர்யாவின் பின்னணி குறித்த தகவல்களும், தியாவின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளும் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றன. சில எதிர்பாராத திருப்பங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளராக சூர்யா பணியாற்றுவது கதையின் முக்கியமான கட்டத்தில் பயன்படுவது நல்ல திரைக்கதை யோசனை.

ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு ஊட்டியின் இயற்கை அழகையும் கதையின் சூழலையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் கதையின் உணர்வுகளுக்கு வலுசேர்க்கின்றன; பின்னணி இசையும் காட்சிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது. படத்தொகுப்பிலும் சில இடங்களில் வேகத்தைக் கூட்டியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், இறுதிக்கட்டக் காட்சிகளைச் சரியான உணர்வுடன் கொண்டு சேர்க்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் இரண்டாம் பாதியும் கிளைமாக்ஸும்தான். குறிப்பாக, இறுதிக்கட்டத்தில் வரும் நீதிமன்றக் காட்சிகள் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளன. சில இடங்களில் சென்டிமென்ட்டை வலுக்கட்டாயமாகத் திணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலும், தந்தை – மகள் உறவின் அடிப்படையான பாசம் பார்வையாளர்களைத் தொடுகிறது. இன்னும் வலுவான திரைக்கதையும், முதல் பாதியில் கூடுதல் கவனமும் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில், சில திரைக்கதைப் பலவீனங்களையும் மெதுவான முதல் பாதியையும் தாண்டி, அப்பா – மகள் பாசத்தால் மனதைத் தொடும் திரைப்படமாக ‘அப்பா குட்டி’ அமைந்திருக்கிறது. குடும்ப உணர்வுகளையும் சென்டிமென்ட் காட்சிகளையும் விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

ரேட்டிங்: 3/5