மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல் ‘வா சிவா’ – ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!
இயக்குநரும் நடிகருமான K.P. ஜெகன் கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியாகியுள்ளது. மறைந்த இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல் இது என்பதால், இசை ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. பாடலுடன் அதற்கான பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
K.P. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் K.P. ஜெகன், விஜய் வர்மா, எம்.எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுக. செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பையும், வீரசமர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. படத்தின் ஆடியோ உரிமையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே இப்படத்தின் அறிமுகக் காணொளி வெளியாகி மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ‘எங்கெங்கோ தேடிப் போனேன்… ஏதேதோ நாடி போனேன்… இப்போ நான் ஆடிப் போனேனே… என் அப்பன் சிவனே… இப்போ நான் ஆடிப் போனேனே… என் ஐயன் சிவனே…’ எனத் தொடங்கும் ‘வா சிவா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அறிமுகப் பாடலாசிரியர் சக்தி உமா பாலகிருஷ்ணா இப்பாடலை எழுதியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் மறைந்த தேவா இப்பாடலைப் பாடியுள்ளார்.
வாழ்க்கையின் இறுதிக்கட்டத்திற்கு முன்பாக தேவாவின் குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடல் என்ற சிறப்பைப் பெற்றுள்ள ‘வா சிவா’, சிவபெருமானிடம் தனது மனக்குறைகளை எடுத்துரைத்துப் பக்தன் ஒருவன் பாடுவதைப் போன்று அமைந்துள்ளது. தேவாவின் தனித்துவமான குரலும், பாடலில் வெளிப்படும் ஆன்மிக உணர்வும் இசை ரசிகர்களை மட்டுமின்றி சிவபக்தர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
மேலும், இப்பாடலில் தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சிவனடியாராகத் தோன்றியுள்ளார். பாடல் படமாக்கப்பட்டபோது 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பல்வேறு இடங்களில் இருந்து ஒன்றிணைந்து பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, கொக்கரை, நந்தி சிருங்கி உள்ளிட்ட பாரம்பரிய சிவ வாத்தியங்கள் வரவழைக்கப்பட்டு, பாடலுக்காகப் பிரத்யேகமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய தனித்துவமான அம்சங்களுடன் வெளியாகியுள்ள ‘வா சிவா’ பாடல், ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
