‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி மீண்டும் இணைகிறது – ஜனவரி 14-ல் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’!
‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ எனத் தனது தனித்துவமான திரைமொழி மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சில வெற்றிகரமான கூட்டணிகள் மீண்டும் இணையும்போது ரசிகர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ‘பாக்கெட் நாவல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் சார்பில் தியாகராஜா குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். தனது முந்தைய படங்களில் வித்தியாசமான கதைக்களங்களையும், தனித்துவமான கதாபாத்திரங்களையும் கையாண்ட தியாகராஜா குமாரராஜா, இந்த முறை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கதையுடன் களமிறங்கியுள்ளார்.
ஐந்து பாடல்கள், சுவாரஸ்யமான கதைக்களம், மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் எனப் பல அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களையும், அவர்களது அனுபவங்களையும் பிரதிபலிக்கும் வகையில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் படத்தின் கதையோடு எளிதில் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் தியாகராஜா குமாரராஜா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். வழக்கமாகத் தனது படங்களின் படப்பிடிப்புக்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும் தியாகராஜா குமாரராஜா, இப்படத்தின் படப்பிடிப்பை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி குறுகிய காலத்திலேயே நிறைவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில், கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி முதல் முறையாகத் தமிழில் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பது மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாகும்.
தனித்துவமான திரைப்படங்களை வழங்கி வரும் தியாகராஜா குமாரராஜா, விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்திருப்பதுடன், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை, முன்னணி நடிகர்களின் பங்களிப்பு எனப் பல எதிர்பார்ப்புகளை ‘பாக்கெட் நாவல்’ உருவாக்கியுள்ளது. பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தியாகராஜா குமாரராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஆண்ட்ரூ லூயிஸ் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பையும், வி. சண்முகராஜா கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், எஸ்.டி. எழில்மதி ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.





