பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘மேயாத மான்’ கூட்டணி… வைபவ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் இரண்டாம் பாகம் அறிவிப்பு!

10

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ரத்ன குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘மேயாத மான்’. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகமான ‘மேயாத மான் 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ரத்ன குமார் மீண்டும் இயக்குநராகப் பொறுப்பேற்கிறார். முதல் பாகத்தில் நடித்த வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் தங்களது முந்தைய கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்கின்றனர். வைபவ் அதே கதாபாத்திரத்திலும், பிரியா பவானி சங்கர் மது என்ற கதாபாத்திரத்திலும், இந்துஜா சுடர் என்ற கதாபாத்திரத்திலும், விவேக் பிரசன்னா வினோத் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இவர்களுடன் புதிதாகச் சில கதாபாத்திரங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.

படம் குறித்து இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், ‘மேயாத மான்’ வெளியாகி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் ‘ஆடை’, ‘குலுகுலு’, ‘29’ உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன், ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற படங்களில் லோகேஷ் கனகராஜுடன் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளேன். இருந்தாலும், எங்கு சென்றாலும் பலரும் ‘மேயாத மான்’ படத்தைப் பற்றிப் பேசுவதுடன், அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்றும் கேட்டு வந்தனர். ஆனால், முதல் பாகத்தின் வெற்றியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் இப்படத்தை எடுக்க விரும்பவில்லை.

‘29’ திரைப்படம் வெளியான பிறகு, அதில் இடம்பெற்ற சம்பவங்களைப் போன்ற அனுபவங்கள் தங்களது வாழ்க்கையிலும் நடந்ததாகப் பலர் என்னிடம் பகிர்ந்துகொண்டனர். படம் குறித்துப் பலரிடமிருந்து கிடைத்த தகவல்களும், அனுபவங்களும் ‘மேயாத மான் 2’ உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டின. அதற்கான பணிகளைத் தொடங்கியபோது, முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் புதுமையான கதைக்களம் உருவானது. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படமும் இசை மற்றும் பாடல்களுக்காகப் பேசப்படும் வகையில் இருக்கும்.

மேலும், இது வழக்கமான இரண்டாம் பாகமாகவோ அல்லது வேறு வழியின்றி உருவாக்கப்படும் படமாகவோ இருக்காது. தனித்துவமான கதையுடனும், கதாபாத்திரங்களுடனும், இசையுடனும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் என நம்புகிறேன். இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ‘மேயாத மான்’ திரைப்படம் தான் நான் தயாரித்த முதல் படம். அதன் பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் 20 திரைப்படங்களைத் தயாரித்துள்ளேன். தற்போது ‘மேயாத மான் 2’ நான் தயாரிக்கும் 22-வது திரைப்படமாக உருவாகிறது. ஜி ஸ்குவாட் மற்றும் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கூட்டணி அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு நல்ல சகாப்தத்தின் தொடக்கமாக அமையும். நல்ல நேரம் உருளட்டும்; வேடிக்கை மீண்டும் தொடங்கட்டும் என்று குறிப்பிட்டார்.

முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதால், ‘மேயாத மான் 2’ திரைப்படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.