படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியில் வண்டியை ஆக்ஸிடண்ட் செய்து கொள்ளை அடிக்க ஒரு பெரிய கல்லை ரோட்டின் குறுக்கே போடுகிறான் ஒருவன். அந்த வழியே வரும் ஒரு வண்டி அதன் மேல் ஏறி ஆக்ஸிடண்ட் ஆகி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகிறது பிறகு வெடித்து சிதருகிறது. மறுநாள் காலை சம்பவ இடத்திற்கு வரும் போலீசாருக்கு இறந்து இருப்பது 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என தெரிய வருகிறது. மேலும் அந்த பாடியை போஸ்ட்மார்ட்டம் செய்ய அதில் ஒரு பெண் ஆக்ஸிடண்டிற்கு 2 மணி நேரம் முன்பே இறந்து போயிருக்கிறாள் எனவும், இறந்த ஆண் வெடி விபத்தினால் இறக்கவில்லை கூறான ஆயுதத்தினால் இறந்திருக்கிறான் எனவும் மேலும் அந்த 3 பெண்களும் பிறவியிலேயே கண் பார்வையற்றவர்கள் என தெரிய வர கதை சுவாரஸ்யமாகிறது. இச்சமயத்தில் மருத்துவத் துரையில் சில அசம்பாவிதங்கள் நடப்பதாகவும் தெரிகிறது. யார் இந்த 3 பெண்கள் என விசாரிக்க ஆரம்பிக்க கதை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. பின் என்ன நடக்கிறது என்பது தான் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆதித்யா மாதவன் முதல் படம் என்பது போலவே அல்லாது மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டாக்டராக வரும் கௌரி கிஷன் ஒரு புரஃபஷனல் டாக்டர் போலவே நமக்கு தோன்றும் அளவிற்கு இத்தனை ஆண்டுகள் தன் நடிப்பு திறமை மெருகேயிருப்பது தெரிகிறது.
மற்றொரு போலீசாக வரும் அஞ்சு குரியன் மிடுக்கான தோற்றத்தில் அசத்துகிறார். மேலும் சண்டை காட்சிகளில் கூட அசால்டாக பெர்ஃபாம் செய்கிறார். உடன் இருக்கும் மற்றொரு போலீசாக வரும் முண்டாசுப்பட்டி ராமதாஸ் அந்த கதாபாத்திரத்தில் அப்படியே ஒன்றி விடுகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நண்டு ஜெகன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் அவரின் லுக் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சில காட்சிகளில் மாத்திரமே வந்தாலும் மாலா பார்வதியும், ஆர். சுந்தர்ராஜனும் மனதில் ஆழமாக பதிகின்றனர்.
படத்தின் ஒளிப்பதிவு நம்மை படத்தினுள் கொண்டு செல்ல மிகவும் உதவியாக இருக்கிறது. ரொமான்ஸ், சண்டை, விறுவிறுப்பு என எல்லா காட்சிகளும் ரசிக்கும்படி படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்.
த்ரில்லர் படித்திற்கே தேவையான விறுவிறுப்பான எடிட்டிங் மூலம் நம்மை கட்டிப் போடுகிறார் எடிட்டர் ராமர். ஃபாந்தம் ப்ரதீன் அவர்களின் சண்டை காட்சிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன.
த்ரில்லர் படத்திற்கு பேர் போன இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திலும் நம்மை அசர வைக்க தவரவில்லை. ரொமான்ஸ் காட்சிகளுக்கு ஏற்றார் போல் ரொமாண்டிக்காகவும், த்ரில்லர் படத்திற்கே உண்டான பானியில் விறுவிறுப்பாகவும் தனது இசையால் கதையை மேலும் வேகமாக எடுத்து செல்ல பேரும் துணையாற்றியிருக்கிறார்.
தனது முதல் படத்திலேயே முக்கியமான ஒரு சமூக சிந்தனையை கதையாக எடுத்ததன் மூலம் நமது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார் இயக்குநர் அபின் ஹரிஹரண். சற்றும் விலகாமல் செல்லும் திரைக்கதை அதற்கு ஏற்ற காட்சியமைப்பு என சிறப்பாக தனது பனியை செய்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்
மொத்தல் அதர்ஸ் – நம்மில் ஒருவரே
Rating – 3.5