உலகை இசையால் நெகிழவைத்த அரை நூற்றாண்டு பயணம் : இளையராஜாவின் திரையுலக பொன்விழாவை கொண்டாட ஒன்றிணைந்த Connekkt Media, Mercuri Movies மற்றும் WPP Media
கலாசாரம், திரையுலகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை இதுவரை இல்லாத வகையில் ஒன்றிணையும் ஒரு சிறப்பான முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜா அறிமுகமானதன் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு தனித்துவமான திரை அஞ்சலியை உருவாக்குகின்றனர்.
1976ஆம் ஆண்டு மே 14 அன்று வெளியான “அன்னக்கிளி” திரைப்படம், இந்திய சினிமாவின் இசை மொழியையே மாற்றியமைத்த ஒரு புதிய இசை உலகத்தை அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 9,000க்கும் அதிகமான பாடல்களுக்கு இளையராஜா அமைத்த இசை, உலக சினிமா வரலாற்றிலேயே மிக ஆழமான உணர்வுகளையும் நீடித்த கலாசார தாக்கத்தையும் ஏற்படுத்திய படைப்புகளாக திகழ்கிறது. இந்த பொன்விழா ஒரு சாதாரண மைல்கல் அல்ல; மனிதகுலத்திற்கு ஒரே ஒருவரால் வழங்கப்பட்ட அசாதாரண கலைப்பங்களின் மகத்துவத்தை உணர்த்தும் தருணமாகும்.
“இளையராஜா அவர்களின் இசை ஒரு பின்னணி இசை மட்டுமல்ல; அது உலகம் முழுவதும் பல தலைமுறைகளின் உணர்ச்சி நினைவாக உள்ளது,” என்று கனெக்ட் மீடியாவின் நிறுவனர் வருண் மாத்தூர் தெரிவித்தார். “அவர் திரையுலகில் 50 அசாதாரண ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், உலகத் தரத்தில் உள்ள சிறந்த படைப்புகளைப் போலவே ஒரு புதிய தரத்தை உருவாக்கும் உள்ளடக்கத்தை உருவாக்க விரும்பினோம். இந்த இணைப்பு, உலகத் தரத்திலான படைப்பாற்றலும் தொழில்நுட்ப திறன்களும் காலத்தால் அழியாத ஒரு கலைக்கு சேவை செய்ய ஒன்றாகும் போது என்ன உருவாகும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.”
இந்த கௌரவிப்பு, உலகத் தரமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அடுத்த தலைமுறை திரைப்பட உருவாக்க முறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் காட்சிப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆழமான திரை அனுபவமாக இருக்கும். உணர்வு, காட்சிக் கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை ஒருங்கிணைத்து, இளையராஜாவின் ஐந்து தசாப்த கால தாக்கத்தை ஒரே நவீன அனுபவமாக சுருக்கி வழங்குகிறது. அது இன்றைய தலைமுறையினரிடமும், அவரது இசை முந்தைய தலைமுறைகளிடம் ஏற்படுத்திய அதே வலிமையுடன் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“இளையராஜாவின் பாரம்பரியம் என்பது ஒரு இசையமைப்பாளரின் சாதனை மட்டும் அல்ல; அது அரை நூற்றாண்டாக கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து வரும் ஒரு உணர்வு,” என்று மெர்குரி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் குழும தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீராம் பக்திசரண் தெரிவித்தார். “அந்த பாரம்பரியத்தை கொண்டாட நாளைய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது எங்களுக்கு ஒரு பெருமையும் பொறுப்பும் ஆகும்.” மேலும், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அணுகலை ஜனநாயகமாக்கியுள்ளது. இந்த கூட்டாண்மை மூலம் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகள், திரைப்படத் தயாரிப்பு செலவுகளை கணிசமாக குறைக்கும். அதே நேரத்தில் படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களின் வாய்ப்புகளை பாதிக்காமல் இருக்கும்,” என்றும் அவர் கூறினார்.
இந்த முயற்சிக்கு தனது படைப்பாற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவத்தை வழங்கும் WPP புரொடக்ஷன், இந்த முயற்சியை கலாசாரமும் தொழில்நுட்பமும் ஒன்றுக்கொன்று சேவை செய்யும் புதிய காலத்தின் அடையாளமாக பார்க்கிறது. “நீடித்து நிற்கும் சிறந்த படைப்புகள் உணர்வு, கலாசாரம் மற்றும் புதுமை சந்திக்கும் இடத்தில் உருவாகின்றன,” என்று WPP புரொடக்ஷனின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் நாகராஜன் தெரிவித்தார். “இந்த அஞ்சலி அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. அதிநவீன செயற்கை நுண்ணறிவு சார்ந்த படைப்பாற்றல் திறன்கள், வெறும் காட்சிச்சிறப்புக்காக அல்லாமல், உண்மையிலேயே காலத்தால் அழியாத ஒரு கலைக்கு மரியாதை செலுத்த பயன்படுத்தப்படுகின்றன. ராஜா சார் இசை தென்னிந்தியாவில் பல தலைமுறைகளின் வாழ்க்கை இசையாக இருந்துள்ளது; அதில் நாங்களும் அடங்குகிறோம்.”