தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான அனந்த் ராம் மற்றும் பிரிகிடா, நடிகர் அனந்த் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்களது காதல் உறவை சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எளிய பின்னணியில் இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்கிய இருவரும், தங்களது திறமை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் இன்று தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்துவரும் இளம் நடிகர்களாக உருவெடுத்துள்ளனர். சினிமா வாயிலாக தொடங்கிய இவர்களின் நட்பு, காலப்போக்கில் காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களிடையே “மீசைய முறுக்கு தம்பி” என்ற அடையாளத்தில் பிரபலமான அனந்த் ராமும், “பவி டீச்சர்” என்ற கதாபாத்திரத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற பிரிகிடாவும், தற்போது தமிழ் சினிமாவின் புதிய நிஜ வாழ்க்கை ஜோடிகளில் ஒருவராக இணைந்துள்ளனர்.
இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், திருமண தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள இந்த ஜோடி, அதே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் பல புதிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தங்களது புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பும், ஆசீர்வாதமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என இருவரும் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர். இவர்களின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.