Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுதி இயக்கியுள்ள, நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகளவில் வெளியிடுகிறது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் விழா, சென்னை தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அட்லீ கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விழாவில் பேசிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கதையை முழுமைப்படுத்த அயராது உழைத்ததாகவும், அவரது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியிருப்பதாகவும் கூறினார். படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் உணர்வுப்பூர்வமான கதையம்சம் ரசிகர்களை வெகுவாக கவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் கொண்டாடும் அழகிய காதல் திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். பிரம்மாண்டமான தயாரிப்பு தரத்துடன் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றார்.
ஒளிப்பதிவாளர் சாய், கல்லூரி நாட்களிலிருந்து நண்பராக இருந்த ஆகாஷ் பாஸ்கரனின் இயக்குநர் கனவு தற்போது நனவாகியிருப்பது பெருமையாக இருப்பதாகவும், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
நடிகர் டிராவிட், யூடியூப் தளத்திலிருந்து திரைப்பட உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தார். படப்பிடிப்பின் போது கிடைத்த நட்பு தனது வாழ்நாள் நினைவாக இருக்கும் என்றும், அதர்வாவுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார்.
நடிகை ஏஞ்சலின், ஊடகத் தொகுப்பாளராக இருந்த தனது பயணத்திலிருந்து நடிகையாக மாறியதில் ‘இதயம் முரளி’ முக்கியமான படமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். படப்பிடிப்பின் போது உருவான நட்பு மற்றும் பாசம் திரையிலும் இயல்பாக வெளிப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
நடன இயக்குநர் அனுஷா, ‘கட்சி சேரா’ பாடலின் வெற்றிக்குப் பிறகு தன்னை நம்பி வாய்ப்பு வழங்கிய Dawn Pictures மற்றும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தார். படத்தின் அனைத்து பாடல்களுக்கும் நடன அமைத்த அனுபவம் தனது திரைப்பயணத்தில் முக்கியமானதாக இருக்கும் என்றார்.
நடிகர் ரக்ஷன், ‘இதயம் முரளி’ ஒருதலைக் காதலின் உணர்வுகளை மிகவும் அழகாகப் பதிவு செய்திருப்பதாகக் கூறினார். ரசிகர்களின் மனதைத் தொடும் காதல் திரைப்படமாக இது அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகிற்கு திரும்பியுள்ள மோனிஷா, தனது ரீ-என்ட்ரி இப்படம் மூலம் அமைந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். நட்பு, காதல், குடும்ப பாசம் ஆகிய அனைத்தையும் இணைக்கும் திரைப்படமாக இது இருக்கும் என்றார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன், ரசிகர்களின் அன்பு தங்களை உற்சாகப்படுத்துவதாகக் கூறியதோடு, படப்பிடிப்பின் போது கிடைத்த நட்பும் அனுபவங்களும் மறக்க முடியாதவை என பகிர்ந்துகொண்டார்.
நடிகை கயாது லோகர், ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, அதர்வாவுடன் இணைந்து நடித்த அனுபவம் சிறப்பானதாக இருந்ததாகக் கூறினார். ‘இதயம் முரளி’ ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
நடிகர் அதர்வா முரளி, இளம் படைப்பாளிகளின் ஆற்றலுடன் உருவான இந்தப் படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்று கூறினார். இயக்குநராக ஆகாஷ் பாஸ்கரனின் முதல் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது பெருமை என்றும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய முழுமையான காதல் திரைப்படமாக இது இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் அட்லீ, ஆகாஷ் எனக்கு தம்பி போன்றவர். எனக்காக அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இந்தக் கதையை நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதியில் அவரே தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவர் செய்திருக்கும் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. இது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன்.
அதர்வாவின் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பும், நடனமும் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பும், எளிமையான அணுகுமுறையும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து இதே உற்சாகத்துடன் சிறப்பாகப் பயணிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். அதேபோல், கயாது மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் நடிகையாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள்.
ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் சாய் ஆகியோர் படத்திற்கு அற்புதமான காட்சியமைப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தத் திரைப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்றார்
இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன், படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். காதல், நட்பு மற்றும் உணர்வுகளை கொண்டாடும் திரைப்படமாக ‘இதயம் முரளி’ உருவாகியிருப்பதாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் இந்தப் படம் கவரும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
காதல், நட்பு மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் அதர்வா முரளியுடன் பகத் பாசில், கயாது லோகர், ப்ரீத்தி முகுந்தன், ரக்ஷன், ஏஞ்சலின், சுதாகர், டிராவிட், மோனிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் எஸ் இசையமைத்துள்ள இப்படம், இசை மற்றும் உணர்வுகள் கலந்த அழகிய காதல் திரைப்படமாக ரசிகர்களை சந்திக்க ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.