பூஜையுடன் தொடங்கிய ‘அல்மோஸ்ட் நல்லவன்’… இயக்குநராக அறிமுகமாகும் ராஜு ஜெயமோகன்; தயாரிப்பில் ஹெச். வினோத் – பேஷன் ஸ்டுடியோஸ் கூட்டணி!

34

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை மையமாகக் கொண்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம், இயக்குநர் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படமான ‘அல்மோஸ்ட் நல்லவன்’ படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று (ஜூலை 6, 2026) சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

‘பிக்பாஸ் தமிழ்’ சீசன் 5 வெற்றியாளரான நடிகர், எழுத்தாளர் ராஜு ஜெயமோகன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் கதாநாயகனாகவும் நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். டார்க் காமெடி, குடும்ப உணர்வுகள், கிராமத்து மண்வாசனை மற்றும் வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த திரைப்படமாக ‘அல்மோஸ்ட் நல்லவன்’ உருவாகி வருகிறது.

படத்தின் தலைப்பிலேயே கதையின் மையக் கருத்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘அல்மோஸ்ட்’ என்ற வார்த்தையை மையமாகக் கொண்டு, மனிதர்களின் நல்ல குணங்கள், குறைகள் மற்றும் இன்றைய டிஜிட்டல் உலகில் உருவாகும் இரட்டை அடையாளங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லும் திரைப்படமாக இது உருவாகிறது.

படத்தின் தொடக்க விழாவில் பிரம்மா, ஹாட்ஸ்டார் சபரி, திங்க் மியூசிக் சந்தோஷ், ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் கார்த்திக், ஆர்.ஜே. பாலாஜி, தயாரிப்பாளர் லலித் குமார், அபிஷேக் கீதம், ரங்கராஜ் பாண்டே, விது, இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசுகையில், புதிய கதைகளை சொல்லும் திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது பெருமை என்றும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய இயல்பான நகைச்சுவை மற்றும் புதிய திரைக்கதையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்தப் படம் உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.

தயாரிப்பாளரும் இயக்குநருமான ஹெச். வினோத், நல்ல கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு அளிப்பார்கள் என்றும், புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் தயாரிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறினார். பேஷன் ஸ்டுடியோஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி இருப்பதாகவும், ‘அல்மோஸ்ட் நல்லவன்’ ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

இயக்குநரும் கதாநாயகனுமான ராஜு ஜெயமோகன், சமூக வலைதளங்களில் உருவாகும் போலி அடையாளங்களும், உண்மையான வாழ்க்கையும் மோதும் சூழ்நிலையை மையமாகக் கொண்ட கதை இது என்றும், எதிர்பாராத சம்பவங்கள் மூலம் நகரும் டார்க் காமெடி பாணியிலான ஃபேமிலி என்டர்டெய்னராக படம் உருவாகி வருவதாகக் கூறினார். மேலும், சத்யராஜ், துஷாரா விஜயன், இமான் அண்ணாச்சி, தாமரை செல்வி, யாழினி, பிரிதம் சக்ரவர்த்தி உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இப்படத்திற்கு சமீபத்தில் தொடர்ந்து வெற்றி பாடல்களை வழங்கி வரும் ஃபாக்ஸன் இசையமைக்கிறார். டி.எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக பாலா ஜெயபிரதா அறிமுகமாகிறார். சண்டைக் காட்சிகளை ஓம் அமைக்க, ஜெஃபர்சன் மற்றும் ராஜி தேனப்பன் ஆடை வடிவமைப்பை கவனிக்கின்றனர். நாக் ஸ்டுடியோஸ் நிறுவனம் விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொள்கிறது.

வலுவான கதைக்களம், திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் புதுமையான திரைக்கதையுடன் உருவாகி வரும் ‘அல்மோஸ்ட் நல்லவன்’, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்ற நம்பிக்கையை படக்குழு தெரிவித்துள்ளது.