விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘ஜுமாக்கா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்; முனீஸ்காந்த் – பாலாஜி சக்திவேல் கூட்டணியில் புதிய காமெடி ஃபேண்டஸி
ஜே.பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய காமெடி ஃபேண்டஸி திரைப்படமான ‘ஜுமாக்கா’ படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் அசோக் ராம் எழுதி இயக்கும் இப்படத்தில், முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழமையான ஒரு கேமராவை மையமாகக் கொண்டு, நகைச்சுவையும், ஃபேண்டஸியும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
ஜே.பி சினிமாஸ் சார்பில் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படத்திற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, அதில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தில் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், ஜெயக்குமார், வினோத் முன்னாஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவை நடிகர்கள் பலர் இணைந்துள்ளதால், முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ஜுமாக்கா’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் சில காட்சிகளையும் பார்த்த நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் அசோக் ராம்மற்றும் தயாரிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வித்தியாசமான கதைக்களம், நகைச்சுவை அம்சங்கள் மற்றும் ஃபேண்டஸி பின்னணியுடன் உருவாகி வரும் ‘ஜுமாக்கா’, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது. படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
