இந்தியாவின் முன்னணி ஓடிடி (OTT) படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awardsவிருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் சீரிஸிற்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்ற அவர், தனது தனித்துவமான பின்னணி இசைக்காக தேசிய அளவில் மீண்டும் ஒருமுறை பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்த விருது விழாவில் ‘சுழல் 2’ வெப் சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்று கவனம் ஈர்த்தது. சிறந்த பிராந்திய வெப் சீரிஸ் (Best Series – Regional), சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack – Regional) – சாம் சி எஸ், மற்றும் சிறந்த நடிகை (Critics – Regional) பிரிவில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் விருதுகளை வென்று, இந்தத் தொடரின் தரத்தையும் வெற்றியையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சாம் சி எஸ் தனது பின்னணி இசையின் மூலம் ஒரு காட்சியின் பதற்றம், உணர்வு, மர்மம் மற்றும் வலியை பார்வையாளர்களிடம் ஆழமாகக் கொண்டு சேர்க்கும் திறனுக்காக தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். குறிப்பாக த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் விசாரணை கதைகளில் அவர் அமைக்கும் பின்னணி இசை, கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறது.
‘சுழல் 2’ தொடரில் கிராமத்து பின்னணி, குடும்ப உறவுகள், மர்மம் மற்றும் குற்ற விசாரணை ஆகிய அம்சங்களை ஒருங்கிணைக்கும் வகையில் சாம் சி எஸ் வடிவமைத்த இசை, தொடரின் விறுவிறுப்பையும் உணர்ச்சி ஆழத்தையும் மேலும் வலுப்படுத்தியது. ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ற இசை அமைப்பின் மூலம் பார்வையாளர்களை கதைக்குள் முழுமையாக ஈர்த்த அவரது பங்களிப்புக்கான அங்கீகாரமாகவே இந்த விருது பார்க்கப்படுகிறது.
திரைப்படங்களோ, வெப் சீரிஸ்களோ என எந்த வடிவமாக இருந்தாலும் கதையின் தேவைக்கேற்ற இசையை வழங்குவதே தனது அடையாளம் என்பதை சாம் சி எஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். வணிக ரீதியிலான இசையையும், கலைநயமிக்க பின்னணி இசையையும் சமநிலையுடன் வழங்கும் அவரது பாணி, அவரை இந்திய திரையுலகின் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், ‘டிமான்டி காலனி 3’ உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதேபோல், நடிகர் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கும் இசையமைப்பாளராக இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான அங்கீகாரங்களையும், மொழிகளைத் தாண்டிய படைப்புகளையும் தொடர்ந்து பதிவு செய்து வரும் சாம் சி எஸ், இந்திய திரையுலகின் மிகவும் பிஸியான மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக தனது இடத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறார். ‘சுழல் 2’ வெப் சீரிஸிற்காக கிடைத்துள்ள இந்த விருது, அவரது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது.