72-வது தேசிய திரைப்பட விருதுகள்: மூன்று தேசிய விருதுகளை வென்ற ‘அமரன்’; ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் 46 ஆண்டு பயணத்தில் புதிய மைல்கல்

56

இந்திய திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனித்துவமான கலைப் பயணத்தை தொடர்ந்து வரும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், தனது 46-வது ஆண்டில் மேலும் ஒரு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அந்நிறுவனம் தயாரித்த ‘அமரன்’ திரைப்படம், 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

கமல்ஹாசன் வழங்கியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், வீரம், தியாகம் மற்றும் நாட்டுப்பற்றை உணர்வுபூர்வமாக சித்தரித்து ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக சிவகார்த்திகேயன்மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் இயல்பான நடிப்பு படத்தின் உணர்ச்சி தாக்கத்தை மேலும் வலுப்படுத்தியது.

இந்தப் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி. பிரகாஷ் குமார், சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதை ஆர். கலைவாணன் பெற்றுள்ளனர்.

கதையின் உணர்வுகளையும், போர்க்களத்தின் தீவிரத்தையும், மனித உறவுகளின் நெகிழ்ச்சியையும் சமநிலையுடன் திரையில் உயிர்ப்பித்ததற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தேசிய அளவில் கௌரவிக்கப்பட்டுள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் உணர்ச்சி ஆழத்தை வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார் தனது பின்னணி இசைக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். அதேபோல், கதையின் ஓட்டத்தையும் திரைக்கதை விறுவிறுப்பையும் துல்லியமாக வடிவமைத்த ஆர். கலைவாணன் தனது படத்தொகுப்பிற்காக தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

இந்த மூன்று தேசிய விருதுகளும் தனிநபர்களின் சாதனையாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர்களின் தொலைநோக்கு பார்வை, படைப்புக் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் தரமான திரைப்படங்களை உருவாக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் நீண்டகால கலைப் பாரம்பரியத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

46 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் புதுமையான மற்றும் தரமான படைப்புகளை வழங்கி வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ‘அமரன்’ திரைப்படத்தின் இந்த தேசிய வெற்றியின் மூலம் தனது பெருமைமிக்க பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து அர்த்தமுள்ள, காலத்தால் நிலைத்திருக்கும் திரைப்படங்களை வழங்க வேண்டும் என்ற தனது உறுதியை இந்த தேசிய அங்கீகாரம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.