சென்னையில் பத்திரிகையாளர்கள், சமூகத்தின் முக்கிய ஆளுமைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் காமராஜர் ஆவணப்படம் மற்றும் ‘திருக்குறள்’ இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த நிகழ்வு தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கியது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் என்றும், 1994-ஆம் ஆண்டு அவரது உதவியாளர் வைரவன் மூலம் ஜி.கே. மூப்பனாரை சந்தித்ததிலிருந்து தொடங்கிய இந்தப் பயணம், பின்னர் ஜி.கே. வாசனின் ஆதரவுடன் நிறைவு பெற்றதாக நினைவுகூர்ந்தார்.
காமராஜர் திரைப்படத்தை உருவாக்குவதற்காக தனது வாழ்க்கையின் 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை அர்ப்பணித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்தப் படத்தை தமிழக அரசு அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் உள்ளிட்ட முக்கிய உரிமைகள் இதுவரை விற்கப்படவில்லை என்றும், தற்போது யூடியூப் வழியாக மட்டுமே மக்களை சென்றடைந்து வருவதாகவும் கூறிய அவர், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கொண்டு செல்லும் வகையில் அரசு இந்தப் படத்தை வாங்கி உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
செய்தியாளர்களின் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், காமராஜரின் அரசியல் நாகரிகத்தை எடுத்துக்காட்டி, புதிய அரசியல் மாற்றங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தையும் பகிர்ந்தார். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும், அந்த மாற்றத்தின் செயல்பாட்டை பொறுமையாகக் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். காமராஜரின் நேர்மையும் மக்கள் நல ஆட்சியும் இன்றும் மக்களின் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணியம் சிவா, காமராஜரை ஒரு அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் மனித உருவில் வாழ்ந்த தெய்வமாகவே பார்க்க வேண்டும் என்றார். நேர்மை, எளிமை மற்றும் மக்கள் சேவைக்காக வாழ்ந்த காமராஜரின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக திரைப்படமாக பதிவு செய்திருப்பதற்காக இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணனை பாராட்டிய அவர், இந்தப் படம் ஒரு திரைப்படமாக அல்லாமல், ஒரு மகத்தான மனிதரின் வாழ்க்கையை நேரில் காணும் அனுபவத்தை வழங்குவதாக குறிப்பிட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முன்னேறினாலும், காமராஜர் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும், குறிப்பாக அரசியலில் இருப்பவர்களும் அரசியலுக்கு வர விரும்புபவர்களும் இந்தப் படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாதம் ஒருமுறையாவது இந்தப் படத்தை ஒருவர் பார்த்தால் அவர் நல்ல மனிதராக மாறுவார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
மேலும், நிகழ்வில் வெளியிடப்பட்ட ‘திருக்குறள்’ இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சியையும் பாராட்டிய சுப்பிரமணியம் சிவா, திருக்குறள் மனிதகுலத்திற்கே வழிகாட்டும் உலகப் பொதுமறை என்றும், அதனை திரைப்பட வடிவில் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி பாராட்டத்தக்கது என்றும் கூறினார். காமராஜர் திரைப்படத்தைப் போலவே, திருக்குறள் திரைப்படமும் சமூகத்திற்கு வழிகாட்டும் படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.
காமராஜரின் வாழ்க்கை மற்றும் திருக்குறளின் சிந்தனைகளை புதிய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழா, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் வரலாற்று விழிப்புணர்வை வலியுறுத்திய நிகழ்வாக அமைந்தது. 







