உலகத் தரத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை சொல்ல வரும் ‘பிரஜாபதி’… டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலம்!
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் ஆன்மீகப் படைப்பான ‘பிரஜாபதி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் JCD பிரபாகர் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டதுடன், படத்தின் உருவாக்கப் பயணம், நோக்கம் மற்றும் உலகளாவிய வெளியீட்டு திட்டங்கள் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். டிரெய்லரைப் பார்த்த சிறப்பு விருந்தினர்கள், திரைப்படத்தின் முயற்சியை பாராட்டி படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் JCD பிரபாகர், “இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பல நிகழ்ச்சிகள் இருந்தபோதிலும், ரூபர்ட் அவர்கள் அழைத்தவுடன் உடனே சம்மதித்தேன். ஏனெனில், காலத்தின் தேவையாக உருவாக வேண்டிய ஒரு முக்கியமான முயற்சிதான் இது என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
இன்றைய சமூகத்தில் நற்செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம் என்றும், அந்த நோக்கத்திற்காக உருவாகியுள்ள இந்த திரைப்படம் மக்களின் மனதைத் தொடும் படைப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். திரைப்படத்தின் டிரெய்லர் உயர்தரமாக உருவாக்கப்பட்டிருப்பதாக பாராட்டிய அவர், படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், “இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வரத்தை அளிக்கிறார். ஆனால் பலர் பயம், குடும்ப சூழ்நிலை அல்லது தைரியக் குறைவு காரணமாக அதை பயன்படுத்தாமல் விடுகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக நாடகங்கள் மூலம் இந்தப் பணியை தொடர்ந்து செய்து வரும் ரூபர்ட் அவர்களின் அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் இந்த திரைப்படத்திலும் பிரதிபலிக்கிறது,” என்றார்.
“இறைவனால் ஆகாத காரியம் எதுவுமில்லை. ஒரு திரைப்படத்தை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவால். இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை எடுத்துச் செல்லும் இந்த முயற்சியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். விசுவாசத்தோடு தொடங்கப்படும் எந்த முயற்சியும் தோல்வியடையாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இயக்குநர் முனைவர் பி. ரூபர்ட் ரகுநாதன் பேசுகையில், “கடந்த 25 ஆண்டுகளாக ‘பிரஜாபதி’ என்ற கதையை நாடகமாக இந்தியா முழுவதும் மேடையேற்றி வருகிறோம். 2013-ஆம் ஆண்டு ஆண்டவர் இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டார். நாடகக் கலை குறைந்து வந்த காலத்திலும் அந்த அழைப்புக்கு கீழ்ப்படிந்து இந்தப் பணியைத் தொடர்ந்தேன்,” என்றார்.
முதலில் அரை மணி நேர நாடகமாக தொடங்கிய ‘பிரஜாபதி’, பின்னர் மூன்று மணி நேர மேடை நாடகமாக வளர்ந்ததாகவும், தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அரங்கேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த நாடகத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை மக்களிடம் கொண்டு சென்றோம். ஆனால், சமீபத்தில் இதை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற இறைவனின் அழைப்பை உணர்ந்தோம். சினிமா என்பது மிகவும் சக்திவாய்ந்த ஊடகம் என்பதால், இந்த தரிசனத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திரைப்படமே சிறந்த வழி என்று நம்பி இந்த முயற்சியைத் தொடங்கினோம்,” என்று அவர் கூறினார்.
பெரிய பொருளாதார பின்னணி இல்லாத நிலையில், முழுக்க முழுக்க விசுவாசத்தின் அடிப்படையிலேயே இந்த திரைப்படம் உருவாகி வருவதாகவும், டிரெய்லரை உருவாக்குவதற்கே சுமார் ₹25 லட்சம் செலவான நிலையில், தேவையான அனைத்து உதவிகளும் இறைவனின் கிருபையால் கிடைத்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்தப் பயணத்தில் தங்களுடன் இருந்த திரைப்பட ஆளுமை செழியன் மறைந்துவிட்டது மிகப்பெரிய இழப்பு என்றும், திரைப்படம் நிறைவடையும் வரை அவர் மேலிருந்து ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ரூபர்ட் ரகுநாதன் தெரிவித்தார்.
‘பிரஜாபதி’ திரைப்படம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லும் படைப்பாக இல்லாமல், மனிதகுலத்திற்கான இறைவனின் அன்பு, கிருபை, இரக்கம் மற்றும் இரட்சிப்பின் செய்தியை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆன்மீகப் படைப்பாக உருவாகி வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு வந்த ‘பிரஜாபதி’ நாடகம், தற்போது உலகத் தரத்தில் திரைப்படமாக உருவெடுத்து, “இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு” என்ற இலக்குடன் சர்வதேச அளவில் நற்செய்தியை எடுத்துச் செல்லும் முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்த திரைப்படம் முழுமையாக மக்கள் பங்களிப்பு (Crowdfunding) மூலம் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் நடித்திருப்பவர்கள் தொழில்முறை திரைப்பட நடிகர்கள் அல்ல; கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பிரஜாபதி’ நாடகத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கலைஞர்களே திரைப்படத்திலும் நடித்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், திரைப்படத்தின் ஆன்மீக நோக்கத்தையும், உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையும் அதன் முயற்சியையும் பாராட்டி, ‘பிரஜாபதி’ உலகம் முழுவதும் மக்களின் இதயங்களைத் தொடும் ஆன்மீகத் திரைப்படமாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.







