மலையாள சினிமாவில் கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வெற்றிக் கூட்டணியான நடிகர் டொவினோ தாமஸ்மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் மீண்டும் இணையவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘குப்பி’ திரைப்படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு, இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
திரையுலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம், இருவரின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘குப்பி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சேத்தன் ஜெயலாலும் இந்தப் புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016-ஆம் ஆண்டு வெளியான ‘குப்பி’ திரைப்படம், டொவினோ தாமஸின் திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. ‘தேஜஸ் வர்க்கி’ என்ற பொறியாளர் கதாபாத்திரத்தில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது. அதேபோல், இயக்குநர் ஜான்பால் ஜார்ஜுக்கும் அந்த படம் சிறப்பான அறிமுகமாக அமைந்து, மலையாள சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக அவரை உயர்த்தியது.
‘குப்பி’க்குப் பிறகு, ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘கோதா’, ‘மாயநதி’, ‘தீவண்டி’, ‘மின்னல் முரளி’, ‘2018’, ‘அஜயண்டே ரண்டாம் மோஷனம் (ARM)’ உள்ளிட்ட வெற்றிப்படங்கள் மூலம் டொவினோ தாமஸ் இந்திய அளவில் கவனம் பெற்ற முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். மறுபுறம், ஜான்பால் ஜார்ஜ் இயக்கிய ‘அம்பிலி’ திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதுடன், ‘ரோமான்சாம்’ திரைப்படத்தை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனது முத்திரையை பதித்துள்ளார்.
‘குப்பி’ திரைப்படத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி, அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.