‘செய்! செய்யாதே!’ இசை & டிரெய்லர் வெளியீடு… சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு!

8

இளம் தலைமுறையினரிடம் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் பாராட்டு தெரிவித்ததுடன், சமூகத்திற்கு தேவையான முக்கியமான கருத்துகளை இப்படம் பேசும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் நீண்ட காலமாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே பயணித்து வருவதாகக் குறிப்பிட்டார். தனது ஜிகர்தண்டா திரைப்படத்தை எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றும் சக்தி சினிமாவுக்கு இருப்பதாக கூறினார். மேலும், அரசியலில் தனக்கென முத்திரை பதித்துள்ள ஹெச். ராஜா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்றும், இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா மருத்துவராக வெற்றிகரமான வாழ்க்கையை விட்டு சினிமாவிற்காக வந்திருப்பது சினிமாவின் ஈர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் பாராட்டினார்.

முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அரசியலில் இருந்த ஒருவர் சமூகப் பொறுப்புள்ள திரைப்படத்தை இயக்குவது பாராட்டத்தக்க விஷயம் என்று கூறினார். மருத்துவ விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு மற்றும் நல்ல செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (M.D., USA), இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுவதாகக் கூறினார். அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களின் பொறுப்பையும் படம் வலியுறுத்துகிறது என்றார். அமெரிக்காவில் இருந்து பலமுறை இந்தியா வந்து பல சவால்களை எதிர்கொண்டு இப்படத்தை உருவாக்கியதாகவும், தனது மனைவி மற்றும் மகளும் இப்படத்தில் பாடியிருப்பதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். மேலும், ஹெச். ராஜா எந்தவித சம்பளமும் பெறாமல் இப்படத்தில் நடித்துக் கொடுத்ததாகவும், அவரது நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்றும் கூறினார்.

தமிழக அரசியல் தலைவர் ஹெச். ராஜா, உடல்நலக் குறைவுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்கள் முன் நிற்பதற்கான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் படத்தில் நடிகர்கள் யாருக்கும் மேக்கப் பயன்படுத்தப்படாமல் இயல்பான தோற்றத்திலேயே நடித்திருப்பதாகவும், இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா மற்றும் படக்குழு சமூக அக்கறையுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார். மேலும், மருத்துவத் துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் இப்படம் பதிவு செய்வதாக அவர் தெரிவித்தார்.

சமூக விழிப்புணர்வும் பொழுதுபோக்கும் இணைந்த படைப்பாக உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’, மருத்துவ நெறிமுறைகள், பொறுப்பான சுகாதார சேவை, மனித உயிரின் மதிப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு, சுயமருந்து உட்கொள்ளுதல், தவறான மருத்துவ தகவல்கள் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூகக் கருத்துகளை வலியுறுத்துகிறது. பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பையும் இப்படம் பேசுகிறது.

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) எழுதி இயக்கியுள்ளார். சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தில் ஹெச். ராஜா, குரு விஜய், தர்ஷினி ரெட்டி, பிரதிக்ஷா மனோ பிரசாந்த், சிதம்பரம் PDK, மௌனிகா ப்ரீத்தி V, தபிதா குணரத்னே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாசு பி. ராம்நாத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார். இசையை டாக்டர் எஸ். ராஜா மற்றும் ஹரிணி சுப்பு மியூசிக் டீம் அமைத்துள்ளனர்.

மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் (CBFC) சான்றிதழைப் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம், 2026 செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமூகத்திற்கு தேவையான முக்கியமான செய்தியை பொழுதுபோக்குடன் எடுத்துரைக்கும் இந்தப் படத்தின் மீது தற்போது நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.