ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் ஒரிஜினல் ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை

9

ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’, 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்‌ஷன் ஒரிஜினல் தொடராகவும் ‘ரிசார்ட்’ அமைந்துள்ளது.

ஒளிபரப்பான நாள் முதல் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் தொடர்ந்து வெளியாகும் எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பார்வையாளர்களிடமும் இந்தத் தொடர் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, ‘ரிசார்ட்’ தொடரின் மொத்த பார்வை நேரத்தில் 53 சதவீதம் தமிழக பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது. மீதமுள்ள 47 சதவீத பார்வை நேரம் தமிழகத்திற்கு வெளியே உள்ள பார்வையாளர்களிடமிருந்து வந்துள்ளது. இதில் 22 சதவீதம் இந்தி மொழி பார்வையாளர்களிடமிருந்தும், 15 சதவீதம் தெலுங்கு பார்வையாளர்களிடமிருந்தும், 10 சதவீதம் மலையாளம் மற்றும் கன்னட மொழி பார்வையாளர்களிடமிருந்தும் கிடைத்துள்ளது.

தமிழில் உருவான ஒரு ஒரிஜினல் தொடர், மொழி மற்றும் மாநில எல்லைகளைத் தாண்டி பல்வேறு தரப்பினரையும் சென்றடைந்திருப்பது இந்தச் சாதனையின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. உள்ளூர் பின்னணியில் உருவாகும் கதைகளும், சரியான கதையம்சத்துடன் மொழிகளைக் கடந்து பரந்த பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என்பதை ‘ரிசார்ட்’ நிரூபித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மைல்கல், ஜியோஹாட்ஸ்டாரின் ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ எனப்படும் நீண்டகால தொடர் வடிவத்திற்கான திட்டமிட்ட முதலீட்டின் வெற்றியாகவும் அமைந்துள்ளது. வாரந்தோறும் பல எபிசோடுகளை வெளியிடுவதன் மூலம், பார்வையாளர்கள் தொடர்ந்து கதையுடன் இணைந்திருக்கும் வகையில் இந்த வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக தென்னிந்தியா முழுவதும் நீண்டகால ஒரிஜினல் தொடர்களின் எண்ணிக்கையை ஜியோஹாட்ஸ்டார் அதிகரித்து வருகிறது. குறுகிய கால பார்வையைத் தாண்டி, நீண்ட காலத்திற்கு பார்வையாளர்களை தக்கவைத்துக் கொண்டு, அவர்களை மீண்டும் மீண்டும் தளத்திற்கு வரவைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சாதனை குறித்து ஜியோஸ்டாரின் சவுத் கிளஸ்டர் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் பிரிவின் தலைவர் கிருஷ்ணன் குட்டி கூறுகையில், “‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்துள்ளது ஜியோஹாட்ஸ்டாருக்கு மிகவும் முக்கியமான மைல்கல். அதேபோல், எங்களது ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ திட்டத்திற்கும் இது ஒரு வலுவான அங்கீகாரமாகும்” என்றார்.

மேலும், “கடந்த ஓராண்டாக தொடர்ந்து பார்வையாளர்களுடன் பயணிக்கும், கலாச்சார ரீதியாக வேரூன்றிய கதைகள் நீண்ட காலத்திற்கு ரசிகர்களைத் தக்கவைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீண்டகால ஒரிஜினல் தொடர்களில் முதலீடு செய்து வருகிறோம். எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதையம்சம் மற்றும் தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்க்கும் தன்மை ஆகியவற்றின் மூலம் ‘ரிசார்ட்’ இந்த அணுகுமுறை சரியானது என்பதை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழுக்கு வெளியே உள்ள பார்வையாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட பாதி பார்வை நேரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய கிருஷ்ணன் குட்டி, “உண்மையான கதைகள் மொழிகளைக் கடந்து நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் என்ற எங்களது நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தென்னிந்தியா முழுவதும் எங்களது ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ பட்டியலை தொடர்ந்து விரிவுபடுத்தும் நிலையில், உள்ளூர் பார்வையாளர்களுடன் வலுவாக இணைவதோடு, நாடு முழுவதும் ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரிஜினல் படைப்புகளை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்” என்றார்.

‘ரிசார்ட்’ தொடருக்கு டிடிகே பிரஸ்டீஜ் கோ-பிரசன்டிங் ஸ்பான்சராக உள்ளது. லலிதா ஜூவல்லரி மார்ட், காலீஸ்வரி ரிஃபைனரி மற்றும் பிரபாஸ் விகேர் ஹெல்த் கிளினிக் ஆகியவை சிறப்பு பார்ட்னர்களாக இணைந்துள்ளன.

பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரிசார்ட்’ தொடரில் விஜய் குமார் ராஜேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

ஆர்ஆர் ரிசார்ட்டில் ஹவுஸ்கீப்பிங் ஊழியராக பணியாற்றும் வெற்றி, ஒரு சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். ரிசார்ட்டின் பின்னணியில் இருக்கும் லட்சியங்கள், உறவுகள் மற்றும் பல்வேறு சவால்களை வெற்றி எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே ‘ரிசார்ட்’ தொடரின் முக்கிய கதைக்களமாக அமைந்துள்ளது.

100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸ் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ள ‘ரிசார்ட்’, தமிழ் ஒரிஜினல் தொடர்கள் மொழி எல்லைகளைக் கடந்து இந்திய அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டவை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரை ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக பார்க்கலாம்.