‘ஹனுமான்’ பட நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு நிச்சயதார்த்தம் – மௌரியாவுடன் டிசம்பரில் திருமணம்!

25

‘ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து, இளம் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துள்ள நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும் மௌரியாவுக்கும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. ஐதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில் இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்தச் சிறப்பான நிகழ்வில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, தெலுங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தெலுங்கானா திரைப்படத் துறை அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, அமைச்சர் சீதக்கா, முன்னாள் அமைச்சர்கள் ஹரீஷ் ராவ், கண்டா ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பழம்பெரும் இயக்குநர் கே. ராகவேந்திர ராவ், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு, தில் ராஜு, டி.ஜி. விஸ்வ பிரசாத், சுஷ்மிதா கொனிடேலா, சாஹு கரபதி, வெங்கட் போயனப்பள்ளி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

நடிகர்கள் ஸ்ரீகாந்த், ரவி தேஜா, நானி, ராணா டகுபதி, அதிவி சேஷ், சுதீர் பாபு, வரலட்சுமி சரத்குமார், நிதி அகர்வால், நிஹாரிகா கொனிடேலா, ரித்திகா நாயக், இமான்வி உள்ளிட்டோரும் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினர். இயக்குநர்கள் பி. கோபால், அனில் ரவிபுடி, பிரசாந்த் வர்மா, சிவா நிர்வாணா, நந்தினி ரெட்டி, கார்த்திக் கட்டம்னேனி, மாருதி, சந்து மொண்டேட்டி, சைலேஷ் கொலானு, பி.வி.எஸ். ரவி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர்.

ஏராளமான திரைப்பிரபலங்களும் முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்ட போதிலும், தேஜா சஜ்ஜாவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த குடும்ப விழாவாகவே இந்த நிச்சயதார்த்த நிகழ்வு அமைந்தது.

நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து தேஜா சஜ்ஜா – மௌரியா ஜோடியின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் வெளிநாடு அல்லது வேறு ஒரு பிரத்யேக இடத்தில் நடைபெறும் டெஸ்டினேஷன் திருமணமாகக் கொண்டாடப்படவுள்ளது. திருமணத்திற்கான இடம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.

புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ள தேஜா சஜ்ஜா – மௌரியா ஜோடிக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.