“கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் – ‘அன்புடன் மகி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு; 2027 தொடக்கத்தில் ரிலீஸ்!”

16

லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்புடன் மகி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், அந்நிறுவனத்தின் முந்தைய படங்களான ‘கருடன்’, ‘மாமன்’ ஆகியவற்றைத் தொடர்ந்து உருவாகிறது. ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் கவனம் ஈர்த்த இயக்குநர் ஹரிஹரன் ராம் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன், ஜி.வி. பிரகாஷ் குமாரே இசையமைக்கிறார்.

‘அன்புடன் மகி’ படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் கிரிக்கெட் வீரராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தீவிரப் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ‘ஜோ’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாளவிகா மனோஜ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், யூடியூப் பிரபலங்களான கார்த்திக் ராமதுரை, தனுஷ், சன் டிவி தொகுப்பாளர் ராகேஷ் மற்றும் காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கர்ணன்’, ‘வாழை’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது ஒளிப்பதிவுப் பணியால் கவனம் ஈர்த்த தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்புப் பணியையும், மீவின் வினோத் கலை இயக்கப் பணியையும் கவனிக்கின்றனர்.

படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், அதன் காட்சியமைப்பு, கதையின் தன்மை மற்றும் ஒட்டுமொத்தத் திரை அனுபவம் குறித்த ஒரு பார்வையை வழங்கும் வகையில் விரிவான லுக் புக்கையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் ‘அன்புடன் மகி’ திரைப்படம், 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் திரைக்கு வரவுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் கிரிக்கெட் வீரராக நடிக்கும் இந்தப் புதிய கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.