தமிழ் இசை உலகின் புதிய குரல்களைத் தேடும் ‘Tamil Idol’! நடுவர்களாக கார்த்திக், பென்னி தயாள், ஆண்ட்ரியா
தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை பாடகர்களை அடையாளம் காணும் புதிய இசைப் பயணமாக ‘Tamil Idol’ நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான Indian Idol நிகழ்ச்சியின் தமிழ் வடிவமாக உருவாகும் இந்த நிகழ்ச்சி, திறமையான இளம் பாடகர்களுக்கு தங்களது குரலையும் திறமையையும் வெளிப்படுத்தும் பெரிய வாய்ப்பாக அமையவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு இசை உலகைச் சேர்ந்த மூன்று பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர். பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக், தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்துள்ள பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் போட்டியாளர்களின் திறமையை மதிப்பிடுவதுடன், அவர்களுக்கு வழிகாட்டவும் உள்ளனர்.
Tamil Idol நிகழ்ச்சியில் இணைந்திருப்பது குறித்து பாடகர் கார்த்திக் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஏராளமான திறமையான பாடகர்கள் இருக்கிறார்கள். Tamil Idol மூலம் இதுவரை வெளிச்சத்துக்கு வராத பல சிறந்த குரல்களை கண்டறிய முடியும் என்று நம்புகிறேன். புதிய பாடகர்களின் திறமையை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழிகாட்டும் இந்தப் பயணத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் சார் தலைமையிலான இந்த முயற்சியில் பங்கேற்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம்” என்றார்.
பாடகர் பென்னி தயாள் கூறுகையில், “நான் ஏற்கனவே Hindi Idol நிகழ்ச்சியில் பலமுறை பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய திறமைகளைப் பார்க்கும்போது அது ஆச்சரியப்படுத்தும் அனுபவமாக இருக்கும். இப்போது தமிழ்நாட்டின் புதிய பாடகர்களைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் சென்னையில் படித்திருக்கிறேன், பல ஆண்டுகள் இங்கு வாழ்ந்திருக்கிறேன். அதனால் இந்த நிகழ்ச்சி எனக்கு இன்னும் நெருக்கமானதாக இருக்கிறது. அடுத்த தலைமுறை பாடகர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரெமையா கூறுகையில், “தமிழர்களின் வாழ்க்கையிலும் கலாச்சாரத்திலும் இசைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உண்டு. தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற திறமையான பாடகர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்து, அவர்களின் திறமைகளையும் வாழ்க்கைப் பயணத்தையும் அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். புதிய குரல்களுக்கு ஒரு பெரிய மேடையை வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் நடைபெறும் இந்த இசைப் பயணத்தின் முதல் ஆடிஷன் ஆகஸ்ட் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. 14 முதல் 30 வயது வரை உள்ள திறமையான பாடகர்கள் இதில் பங்கேற்கலாம்.
ஆடிஷன் நடைபெறும் இடம்:
Velammal Vidyalaya Annexure, Mel Ayanambakkam, சென்னை.
தமிழ்நாடு முழுவதும் இருந்து புதிய குரல்களைத் தேடி, அவர்களுக்கு தேசிய அளவிலான மேடையை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள ‘Tamil Idol’, விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது.
புதிய குரல்கள், புதிய கனவுகள் மற்றும் இசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சி, தமிழ் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.