‘மொத ராத்திரி’ தேவியாக கவனம் ஈர்த்த பானுப்பிரியா… வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!

7

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார் நடிகை பானுப்பிரியா. இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள அவர், தற்போது முன்னணி இயக்குநர்கள் மற்றும் நட்சத்திரங்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த பானுப்பிரியா, லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பை முடித்துள்ளார். தொடர்ந்து பக்ருதீன் மாஸ்டரின் நாடகக் குழுவில் இணைந்து நடிப்பின் அடிப்படைகளை கற்றுக்கொண்ட அவர், பின்னர் முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

பானுப்பிரியாவின் திரைப்பயணத்தில் ‘கூழாங்கல்’ திரைப்படம் முக்கியமான தொடக்கமாக அமைந்துள்ளது. பக்ருதீன் சார் மூலமாக அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறும் அவர், அந்தத் திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வெல்லும் என்று அப்போது எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். தொடர்ந்து ‘தாய் கிழவி’திரைப்படம் தனது திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்திற்கான வாய்ப்பாக அமைந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் பக்ஸ் கதாபாத்திரத்தின் மனைவியான தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பானுப்பிரியா. படத்தில் அவரது கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், இது தனது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பானுப்பிரியா கூறுகையில், “பக்ருதீன் சார் மூலமாக ‘கூழாங்கல்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவிக்கும் என அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. என் கரியரில் அடுத்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பாக ‘தாய் கிழவி’ படம் அமைந்தது. இப்போது ‘மொத ராத்திரி’ படத்தில் பக்ஸ் சாரின் மனைவி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது” என்றார்.

தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருவது தனது திரைப்பயணத்தில் மகிழ்ச்சியளிப்பதாகவும் பானுப்பிரியா தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜன் வகையறா’ திரைப்படத்தில் நடிகர் கிஷோரின் மனைவியாக நடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’, ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படம் என பல முக்கியமான படங்களில் பானுப்பிரியா நடித்து வருகிறார்.

“பெரிய இயக்குநர்கள் படங்களில் நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என தனது தற்போதைய பட வாய்ப்புகள் குறித்து உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார் பானுப்பிரியா.

‘கூழாங்கல்’ முதல் ‘மொத ராத்திரி’ வரை மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வரும் பானுப்பிரியா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருவது, தமிழ் திரையுலகில் அவரது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.