தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா நடிப்பில், இயக்குநர் ர. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 100வது திரைப்படமான ‘கிங் 100 – KING 100’ படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. நாகார்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தக் க்ளிம்ப்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ர. கார்த்திக், தற்போது நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படத்தை இயக்கி வருகிறார். நாகார்ஜுனாவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் இந்தப் படத்தை, அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான நாகார்ஜுனா, தனது 100வது திரைப்படத்தின் மூலம் மீண்டும் பான் இந்தியா ரசிகர்களை சந்திக்கத் தயாராகி வருகிறார்.
பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வரும் ‘கிங் 100’, நாகார்ஜுனாவின் திரை ஆளுமையை மையமாகக் கொண்டதாக உருவாகி வருவதை க்ளிம்ப்ஸ் உணர்த்துகிறது. அவரது திரைத்தோற்றம், கம்பீரமான திரை இருப்பு மற்றும் ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான காட்சியமைப்புகள், இந்தக் காணொளியின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக, நாகார்ஜுனாவின் 100வது திரைப்படம் என்பதால், இயக்குநர் ர. கார்த்திக் படத்தின் காட்சியமைப்புகளிலும் கதாபாத்திர வடிவமைப்பிலும் சிறப்பு கவனம் செலுத்தியிருப்பது க்ளிம்ப்ஸ் மூலம் தெரிய வருகிறது. ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் ஆக்ஷன், கமர்ஷியல் அம்சங்கள் மற்றும் நாகார்ஜுனாவின் ஸ்டைலான திரை அணுகுமுறை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, என். சதீஸ் குமார் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்கிறார். படத்தொகுப்பை நவீன் நூலி மேற்கொள்கிறார். பிரசாத் நிம்மகாயலா கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.
நாகார்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த க்ளிம்ப்ஸ், அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, 100வது திரைப்படம் என்பதால் நாகார்ஜுனா – ர. கார்த்திக் கூட்டணி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘கிங் 100 – KING 100’ திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்என படக்குழு அறிவித்துள்ளது. நாகார்ஜுனாவின் திரைப்பயணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 100வது திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான சினிமா விருந்தாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.
