“50 நாட்கள் ஓடுவது மிகப்பெரிய சாதனை!” – ‘கட்டா குஸ்தி 2’ வெற்றி விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்!

6

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அமைச்சர் ராஜ்மோகன், பத்மஸ்ரீ பிரபுதேவா, நடிகர்கள் விஷ்ணு விஷால், யோகி பாபு, ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பிரபுதேவாவை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பாராட்டியதுடன், அவருடன் பணியாற்றியபோது பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் பிரபுதேவா, கேமரா முன்பு நின்றவுடன் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்றும், அவரது தொழில்முறை அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அனைவருக்கும் முன்னுதாரணம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவது இன்றைய சூழலில் மிகப்பெரிய சாதனை என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் பாராட்டினார்.

படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி, சிறுமி ஜாரா உள்ளிட்ட கலைஞர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். அதேபோல், திரையில் தெரியாத தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஸ்டண்ட் குழு, ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பையும் குறிப்பிட்டார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, 50வது நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். விஷ்ணு விஷால் ஒரு சிறந்த சக நடிகர் மட்டுமல்லாமல், படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அவரை ஒரு தயாரிப்பாளராகவும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்.

மேலும், ‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்தில் கீர்த்தி கதாபாத்திரத்திற்காக தன்னை தேர்வு செய்த இயக்குநர் செல்லா அய்யாவுக்கு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா லட்சுமி, அந்த கதாபாத்திரம் தனக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அன்பையும் அடையாளத்தையும் பெற்றுத் தந்துள்ளதாக கூறினார். படத்தின் வெற்றிக்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நடிகை மோக்ஷா, தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், ‘மீனாட்சி’கதாபாத்திரத்திற்காக தன்னை தேர்வு செய்த இயக்குநர் செல்லா அய்யாவுக்கு நன்றி என்றும் கூறினார்.

‘மீனாட்சி’ கதாபாத்திரம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட மோக்ஷா, தற்போது பலரும் தன்னை தனது இயற்பெயரான மோக்ஷாவைவிட ‘மீனாட்சி’ என்றே அழைப்பதாகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார். ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு பிற மொழி ரசிகர்களிடமும் அந்த கதாபாத்திரம் சென்றடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

குழந்தை நட்சத்திரம் ஜாரா, 50வது நாள் விழாவில் தனக்கு வழங்கப்பட்ட கேடயத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார். படத்தில் தன்னை தேர்வு செய்த பெற்றோர், இயக்குநர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், படப்பிடிப்பு தளத்தில் தன்னை அன்பாகவும் வசதியாகவும் உணர வைத்த சக நடிகைகளுக்கும் நன்றி கூறினார்.

நடிகர் யோகி பாபு, இயக்குநர் செல்லா அய்யாவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ திரைப்படம் முதல் தொடர்ந்து பயணித்து வருவதாக தெரிவித்தார். ‘கட்டா குஸ்தி’ படத்தின் மூன்றாம் பாகத்திற்கான வாய்ப்பை உருவாக்கும் வகையில் இரண்டாம் பாகத்தின் இறுதியில் ஒரு வசனம் இடம்பெற்றிருப்பதாகவும், அதற்காக இயக்குநருக்கு நன்றி என்றும் கூறினார்.

மேலும், தற்போதைய சூழலில் ஒரு திரைப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது அரிதாகிவிட்ட நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்காக 50வது நாள் விழா நடத்தி கலைஞர்களைக் கௌரவிப்பது மகிழ்ச்சியளிப்பதாக யோகி பாபு தெரிவித்தார். இதேபோல் 100வது நாள் விழாவையும் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ள ‘கட்டா குஸ்தி 2’, முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் 50வது நாள் வெற்றி விழா, படக்குழுவினரின் உழைப்பையும் வெற்றியையும் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது.