மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
‘துரோகம் பழகு’ படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், ராம்கி, நடிகைகள் பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர்.
வெளியாகியுள்ள முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, “சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…” என்ற அழுத்தமான ஒன்-லைன், படத்தின் மையக் கருத்து குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
துரோகம், நம்பிக்கை, உறவுகள்…
இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களை அழுத்தமாகப் பதிவு செய்யும் படைப்பாக ‘துரோகம் பழகு’ உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியுடன், கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பும் இப்படத்தின் முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கதாபாத்திரத்திற்குத் தேவையான உணர்வுகளையும் ஆக்ஷன் காட்சிகளையும் வெளிப்படுத்த தக்க்ஷன் விஜய் சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டு நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இசையில் வைரமுத்து
புதுமுக இசையமைப்பாளர்களான பாலா மற்றும் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து படத்தின் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளதுடன், திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இளைஞர்களை குறிப்பாக கவரும் வகையிலும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலும் ‘துரோகம் பழகு’ திரைப்படம் உருவாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ‘துரோகம் பழகு’ தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் வெளியீட்டு தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
