“வாழ்க்கையில் விழுந்த பிறகு மீண்டும் எழுந்து நிற்க முடியும் என்பதற்கு நாகராஜ் உதாரணம்” – ‘ஆகாயம்’ இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி!

2

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர், கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

‘தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஆகாயம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தையும் அவரே எழுதியுள்ளார்.

“மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் உதாரணம்” – அஜயன் பாலா

எழுத்தாளர் அஜயன் பாலா பேசும்போது, தினந்தோறும் நாகராஜை சுமார் 25 ஆண்டுகளாக நண்பராக அறிந்திருப்பதாகவும், அவர் கதை சொல்லும் விதம் எப்போதும் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

‘தினந்தோறும்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் ரசிகர்கள் நாகராஜை தூக்கிக் கொண்டாடியதை நேரில் பார்த்ததாகக் கூறிய அவர், அதன்பிறகு அவரது வாழ்க்கையில் எதிர்பாராத தடுமாற்றங்கள் ஏற்பட்டதாகவும், வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு கீழே சென்றாலும் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணமாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், “‘ஆகாயம்’ இசை வெளியீட்டு விழா மற்றவர்களுக்கு ஒரு சாதாரண விழாவாக இருக்கலாம். ஆனால் நாகராஜைப் பொறுத்தவரை இது ஒரு புதிய பிறப்பு போன்றது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

“நாகராஜ் அண்ணாதான் எனது சினிமா குரு” – இயக்குநர் பாலசேகர்

இயக்குநர் பாலசேகர் பேசுகையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே நாகராஜை சந்தித்ததாகவும், அவரது பேச்சு, கதை சொல்லும் திறன் மற்றும் காட்சிகளை விவரிக்கும் விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார்.

“சினிமாவில் எனக்கு குரு என்று யாரையாவது சொல்ல வேண்டும் என்றால் அது நாகராஜ் அண்ணா மட்டும்தான். அவரிடமிருந்து வசனம், மாடுலேஷன், கதை சொல்லும் விதம் என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

மேலும், நாகராஜ் சினிமாவை ஒருபோதும் கைவிடவில்லை என்றும், சினிமா ஒருவரை கடைசி வரை கைவிடாது என்பதற்கு அவரே சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்தார். நாகராஜின் திறமையை நம்பி இப்படத்தை தயாரித்த ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“‘ஆகாயம்’ நாகராஜை மீண்டும் பேச வைக்க வேண்டும்” – சற்குணம்

இயக்குநர் சற்குணம் பேசும்போது, இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தனது தம்பியும் உறவினரும் ஆவார் என்றும், தனது முதல் தயாரிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள அவரை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

“‘தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தினந்தோறும் நாகராஜ், ‘ஆகாயம்’ படத்தின் மூலமாகவும் அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும். இந்தப் படம் அவருக்கு மீண்டும் ஒரு முக்கியமான வெற்றியாக அமைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.

“நாகராஜ் போன்ற பெரிய இயக்குநருடன் பணியாற்றியது மகிழ்ச்சி” – ஸ்ரீராம் கார்த்திக்

‘ஆகாயம்’ படத்தின் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக் பேசுகையில், நாகராஜ் போன்ற ஒரு பெரிய இயக்குநருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார்.

“அவர் இந்த கதாபாத்திரத்தை எவ்வளவு நேசித்து உருவாக்கியிருக்கிறார் என்பதை அவர் ஸ்கிரிப்ட் சொல்லும்போதே உணர்ந்தேன். படப்பிடிப்பின் கடைசி நாளில் கூட, நான் அவர் நினைத்தபடியே அந்தக் கதாபாத்திரமாக நடித்திருக்கிறேன் என்று கூறி என்னைப் பாராட்டியது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவரது இயக்கமும், குறிப்பாக வசனங்களும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்” என்றார்.

மேலும், ஆலிஷா மிராணி சிறப்பாக நடித்திருப்பதாகவும், அவர் நிச்சயம் பெரிய இடத்திற்கு வருவார் என்றும் குறிப்பிட்டார். தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர் ரகுநந்தன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“சிறிய யோசனையால் கூட காட்சியை உயர்த்தக்கூடியவர்” – இயக்குநர் கிருஷ்ணா

இயக்குநர் கிருஷ்ணா பேசும்போது, ‘மின்னலே’ படத்தில் நாகராஜுடன் இணைந்து பணியாற்றிய காலத்திலிருந்து தங்களது நட்பு தொடர்வதாகக் கூறினார்.

தனது பல கதைகளையும் முதலில் நாகராஜிடம் கூறி, அவரது ஆலோசனைகளின் அடிப்படையில் மாற்றங்களை செய்திருப்பதாக தெரிவித்த அவர், நாகராஜ் மிகவும் கிரியேட்டிவான மனிதர் என்று பாராட்டினார்.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா, ஜோதிகா தொடர்பான முக்கியமான காட்சியில் நாகராஜ் கூறிய ஒரு சிறிய யோசனை பின்னர் திரையரங்கில் கைதட்டலைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாகராஜ் சிறந்த இயக்குநர் மற்றும் எழுத்தாளர் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நடிகரும் கூட என்று கூறிய கிருஷ்ணா, ‘தினந்தோறும்’ படத்தில் அவரது கதாபாத்திரம் ‘ஷோ ஸ்டீலர்’ ஆக இருந்ததாகவும் தெரிவித்தார்.

“ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் வாழ்ந்து கதை சொல்வார்” – ரகுநந்தன்

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில், நாகராஜை முதன்முதலில் சந்தித்தபோது அவருடன் பணியாற்றுவதற்கு சற்று பயமாக இருந்ததாகவும், ஆனால் அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்துக் காட்டி கதை சொன்ன விதம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறினார்.

“ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் அவர் வாழ்ந்தது போல உணர்வார். பாடல்கள் உருவாக்கத்திலும் அவர் முழுமையாக ஈடுபட்டார். பின்னணி இசையிலும் படத்தின் கதாபாத்திரங்களையும் நடுத்தரக் குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையையும் மனதில் வைத்து பணியாற்றினோம்” என்றார்.

‘ஆகாயம்’ தேசிய விருது பெற வேண்டும் என்று தான் மனதார விரும்புவதாகவும் ரகுநந்தன் தெரிவித்தார்.

“நாகராஜின் படங்கள் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்” – இயக்குநர் சசி

இயக்குநர் சசி பேசும்போது, நாகராஜை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்ததாகவும், அவர் கதை சொல்லும் விதம் தன்னை பிரமிக்க வைத்ததாகவும் தெரிவித்தார்.

“நாகராஜ் எனக்கு நண்பர் என்றாலும், அவரை நான் மிகப்பெரிய கிரியேட்டிவ் மனிதராகப் பார்க்கிறேன். அவருடைய கதைகளில் இருக்கும் சென்சிபிலிட்டியும், குறிப்பாக பெண் கதாபாத்திரங்களில் இருக்கும் கண்ணியமும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.

சில திரைப்படங்கள் திரையரங்கில் ஓடி முடிந்துவிடும்; ஆனால் சில படங்கள் முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட படங்களை உருவாக்கும் இயக்குநர் நாகராஜ் என்றும், ‘ஆகாயம்’ படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் சசி தெரிவித்தார்.

“விழுந்த பிறகு எழுந்து நிற்பவன்தான் உண்மையான மனிதன்” – சித்ரா லட்சுமணன்

இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசுகையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல கலைஞனை மீண்டும் சினிமாவுக்குள் அழைத்து வந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“வாழ்க்கையில் விழாதவர்கள் யாரும் இல்லை; விழுந்த பிறகு எழுந்து நிற்பவன்தான் உண்மையான மனிதன். அதை நாகராஜ் சாதித்துக் காட்டியிருக்கிறார். அவருடைய திறமை ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அவருக்கு தேவைப்பட்டது மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்புதான். அந்த வாய்ப்பை தயாரிப்பாளர்கள் வழங்கியிருக்கிறார்கள்” என்றார்.

“‘ஆகாயம்’ அன்பைப் பற்றிப் பேசும் படம்” – தினந்தோறும் நாகராஜ்

இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் பேசும்போது, மீண்டும் தன்னை இந்த மேடையில் நிற்க வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தயாரிப்பாளர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி, தான் சொன்ன கதையை சுமார் மூன்று மணி நேரம் கேட்டுவிட்டு, உடனடியாக இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்ததாகக் கூறினார். தன் மீது வைத்த நம்பிக்கையை பாதுகாத்து இப்படத்தை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

“என்னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்று மீண்டும் திரும்பி வர நினைப்பவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும்’ என்று ஒரு வசனம் இருக்கிறது. குடியை ஒருபோதும் கொண்டாட வேண்டிய விஷயமாக பார்க்கக்கூடாது. அதே நேரத்தில் தவறிவிட்ட ஒருவர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்பதற்கும், அவருக்கு ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்கும் இந்தப் படம் ஒரு குரலாக இருக்கும்” என்றார்.

மேலும், “‘ஆகாயம்’ படத்தில் குடிக்கு எதிரான கருத்து, ஒரு அழகான காதல் கதைக்குள் வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு விஷயமாக இடம்பெற்றுள்ளது. அரசியலும் படத்தில் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி இந்தப் படம் அன்பைப் பற்றித்தான் பேசுகிறது. இந்த உலகம் அன்பால் உருவானது என்று நான் மீண்டும் நம்புகிறேன். அதே அன்பைத்தான் ‘ஆகாயம்’ பேசுகிறது” என்று தெரிவித்தார்.

‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், இந்துமதி மணிகண்டன், தீபா, தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசையமைத்துள்ளார். பாடல்களை ஏக்நாத், சாரதி மற்றும் ரமணிகாந்தன் எழுதியுள்ளனர். சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். பையர் கார்த்திக் சண்டைப் பயிற்சியையும், மணிகண்டன் நடன அமைப்பையும் கவனித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள சிறப்பாக நடைபெற்ற நிலையில், ‘ஆகாயம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.