‘தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற தினந்தோறும் நாகராஜ், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் அன்புடன் ‘தினந்தோறும் நாகராஜ்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘மின்னலே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதி பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘ஆகாயம்’ என்ற புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராக மீண்டும் களமிறங்கியுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி அவரே இயக்கியுள்ளார்.
‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் கவனம் பெற்ற ஸ்ரீராம் கார்த்திக், ‘ஆகாயம்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆலிஷா மிராணி இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், ‘மெய்யழகன்’ படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, ‘மகாராஜா’ திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘சென்னை டு சிங்கப்பூர்’, ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். ‘நீர்ப்பறவை’, ‘அயோத்தி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாடல்களை ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ உள்ளிட்ட பிரபல பாடல்களை எழுதிய ஏக்நாத், ‘காற்றோடு பட்டம் போல’, ‘நீலோத்தி’ உள்ளிட்ட பாடல்களை எழுதிய சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர். ‘ஒரு நொடி’, ‘ஜென்ம நட்சத்திரம்’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா, இப்படத்தின் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.
சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைக்க, நடன அமைப்பை மணிகண்டன் கவனித்துள்ளார். புவன் செல்வராஜ் மக்கள் தொடர்புப் பணியை மேற்கொள்கிறார். பிரசாந்த் தயாரிப்பு மேற்பார்வையில், ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
“குடிக்கு எதிரான படம்; ஆனால் உயிர்த்துடிப்பான வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன்”
‘ஆகாயம்’ திரைப்படம் குறித்து இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கூறுகையில், “கதையாகச் சொன்னால் ‘ஆகாயம்’ குடிக்கு எதிரான படம். ஆனால், அதை உயிர்த்துடிப்பான ஒரு வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன். அதேநேரத்தில் இதில் அரசியலும், சமூக அக்கறையும் இணைந்து வந்திருக்கின்றன.
படங்கள் அனுபவங்களைத் தந்து, வாழ்க்கைக்குள் நுழைந்து நல்ல உணர்வுகளைத் தர வேண்டும். அப்படியான ஒரு சினிமாவை செய்வதுதான் நமக்கு கௌரவம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன். ‘ஆகாயம்’ அப்படியான படம். ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.







‘

