ஷபீர் சுல்தான் – சின்மயி இணைந்த ‘வான்மதி’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு!

6

பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஷபீர் சுல்தான் மற்றும் பிரபல பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபாதாஇணைந்து உருவாக்கியுள்ள புதிய Independent தமிழ் பாடலான ‘வான்மதி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் கவிதை மற்றும் இனிமையான மெலடியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் பாடலில் R&B, ஹிப்-ஹாப் மற்றும் இந்திய பாரம்பரிய இசையின் கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஷபீர் மியூசிக் ஏசியா இசை நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள ‘வான்மதி’, செப்டம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

பாடலின் விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செப்டம்பர் 12 அன்று சென்னை AMPA SKYONE மாலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாடல் குழுவினர் ரசிகர்களை சந்தித்து, பாடல் வெளியீட்டை கொண்டாடினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர்கள், ‘வான்மதி’ பாடலின் வித்தியாசமான இசை அமைப்புக்கும், ஷபீர் சுல்தான் – சின்மயி கூட்டணிக்கும் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.

காதலை மையமாகக் கொண்ட ‘வான்மதி’

காதலை மையமாகக் கொண்ட ‘வான்மதி’ பாடல், இயற்கையுடன் தொடர்புடைய கேள்விகளின் வழியாக காதல் உணர்வை வெளிப்படுத்துகிறது. சூரியன் உதிக்காமல் இருக்க முடியுமா? நிழல் நம்மைத் தொடராமல் இருக்க முடியுமா? மலர் மலராமல் இருக்க முடியுமா? எனத் தொடங்கும் பாடல், இறுதியில் இதயம் காதலில் விழாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வியை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் மெலடி மற்றும் கவிதை வரிகளுடன் தொடங்கும் பாடல், தொடர்ந்து ஹிப்-ஹாப் மற்றும் R&B இசைக் கூறுகளுடன் இணைகிறது. நவீன சின்தசைசர் இசையுடன் இந்திய பாரம்பரிய இசையின் தாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கரஹரப்ரியா மற்றும் சுத்த தன்யாசி ராகங்களின் தாக்கத்துடன் அமைந்துள்ள செமி-கிளாசிக்கல் பகுதியும் பாடலுக்கு கூடுதல் தனித்துவத்தை வழங்குகிறது.

ஷபீர் சுல்தான் – சின்மயி கூட்டணி

‘வான்மதி’ பாடல் ஷபீர் சுல்தான் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா இணையும் முக்கியமான Independent இசைப் படைப்பாக அமைந்துள்ளது. பாடலுக்கு ஷபீர் சுல்தான் வரிகள் எழுதி இசையமைத்துள்ளார். அபின் பால் மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக ‘Must Date the Playboy’ படைப்பில் இணைந்து பணியாற்றிய ஷபீர் சுல்தான், முசம்மில் எலியாஸ் மற்றும் சந்த்னி நாகதுர்கா ஆகியோர் மீண்டும் ‘வான்மதி’ மூலம் இணைந்துள்ளனர்.

‘வான்மதி’ இசை வீடியோவை முசம்மில் எலியாஸ் இயக்கியுள்ளார். இதில் முசம்மில் எலியாஸ் மற்றும் சந்த்னி நாகதுர்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

மெலடி, கவிதை, நவீன இசை மற்றும் இந்திய பாரம்பரிய இசைக் கூறுகளை ஒரே பாடலில் இணைத்துள்ள ‘வான்மதி’, தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.