‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக இணையும் ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!
சமையல், பொழுதுபோக்கு மற்றும் பிரபலங்களின் போட்டி என பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் உருவாகி வரும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில், ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ வெற்றியாளர் செஃப் சாஷி செலியா நடுவராக இணைந்துள்ளார்.
Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியை நடிகை சமந்தா ரூத் பிரபு முன்னெடுக்கிறார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் சமையலறைக்குள் போட்டியாளர்களாக களமிறங்கி, தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்தவுள்ள நிலையில், அவர்களின் முயற்சிகளுக்கு சாஷி செலியாவின் அனுபவம் மற்றும் மதிப்பீடு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவுள்ளது.
செஃப் சாஷி செலியாவின் சமையல் பயணம் வழக்கமான பாதையில் அமையவில்லை. தனது பணியை சிங்கப்பூர் காவல்துறையில் தொடங்கிய அவர், பின்னர் சமையல் துறையில் தனது ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ போட்டியில் பங்கேற்றார். தொடர்ந்து தனது சமையல் திறமையால் போட்டியின் வெற்றியாளராக பட்டத்தை கைப்பற்றினார்.
அவரது சமையல் பாணியில் சிறுவயதில் அவரைச் சுற்றி வளர்ந்த இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு சுவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவின் மூலம் ஒருவரது பின்னணி, கலாசாரம் மற்றும் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை தனது சமையல் பயணம் தனக்கு உணர்த்தியதாக சாஷி செலியா தெரிவித்துள்ளார்.
‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் நடுவராக இணைவது குறித்து அவர் கூறுகையில், “மாஸ்டர்செஃப் சமையலறையை நோக்கிய எனது பயணம் முற்றிலும் எதிர்பாராதது. சிங்கப்பூர் காவல்துறையில் பணியைத் தொடங்கிய நான், ஒருநாள் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா சமையலறைக்குள் நுழைந்து, அந்தப் போட்டியில் வெற்றி பெறுவேன் என்று நினைத்ததே இல்லை. எனது சிறுவயதையும் சமையல் அடையாளத்தையும் வடிவமைத்த இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு சுவைகள் எனது பயணத்தில் முக்கியமானதாக இருந்தன” என்றார்.
மேலும், மாஸ்டர்செஃப் போட்டியில் போட்டியாளராக இருந்த அனுபவம் தனக்கு இருப்பதால், சமையலறையில் போட்டியாளர்கள் எதிர்கொள்ளும் பதற்றம், அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையை தன்னால் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சமையலறையின் மறுபுறத்தில் இருந்து போட்டியாளர்களின் திறமையை மதிப்பிடப் போவதாகவும், அவர்களின் எல்லைகளைத் தாண்டி புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தூண்டுவதுடன், அவர்கள் கொண்டு வரும் தனித்துவமான சுவைகளையும் கதைகளையும் கண்டறிய ஆவலாக இருப்பதாகவும் சாஷி செலியா கூறியுள்ளார்.
பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், சமையல் திறமை மட்டுமின்றி போட்டியின் அழுத்தம், எதிர்பாராத சவால்கள் மற்றும் தனித்துவமான உணவு முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கவுள்ளன. இதனால் வழக்கமான சமையல் நிகழ்ச்சிகளிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமையலின் சுவையுடன் பிரபலங்களின் போட்டி, பொழுதுபோக்கு மற்றும் பரபரப்பான தருணங்களை இணைத்து உருவாகியுள்ள ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி விரைவில் ரசிகர்களின் வீடுகளை வந்தடையவுள்ளது.