‘தி பாரடைஸ்’ படத்திற்காக சென்னை வந்த நானி – “24-ம் தேதி உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது!”

11

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள இப்படத்தில் நானியுடன் கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்று, ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் இப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள ‘தி பாரடைஸ்’ படத்தின் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, நடிகர் நானி மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஸ்வரூப் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய ஸ்வரூப் ரெட்டி, நவராத்திரி திருவிழாவையொட்டி ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாகவும், நானி நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். நானியின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், ‘தி பாரடைஸ்’ படத்திற்கும் ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா பேசுகையில், தனக்கு தமிழ் தெரியாது என்றும், அடுத்த படத்தில் தமிழைக் கற்றுக்கொண்டு தமிழில் பேசுவேன் என்றும் தெரிவித்தார். ‘தி பாரடைஸ்’ திரைப்படம் தாய் மற்றும் புரட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதை என்றும், இந்த அம்சங்கள் ரசிகர்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

நடிகர் நானி பேசுகையில், “நான் நல்ல நடிகரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்களைப் போன்ற ஒரு நல்ல பார்வையாளன் என்பது எனக்குத் தெரியும். ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற பிரம்மாண்டமான மாஸ் திரைப்படங்கள் வெளியாவது குறைவு. அந்த வகையில் திரையரங்கில் பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படமாக ‘தி பாரடைஸ்’ இருக்கும்” என்றார்.

மேலும், இப்படத்தில் அழுத்தமான எமோஷன்களுடன், திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான அனுபவத்தையும் வழங்கியுள்ளதாக நானி தெரிவித்தார். “ஒவ்வொரு ரசிகருக்கும் இது போன்ற ஒரு மாஸான திரைப்படம் தேவை. ‘தி பாரடைஸ்’ அப்படிப்பட்ட திரைப்படம் என்பதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். 24-ஆம் தேதி திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்த்த பிறகு நீங்களும் அதைச் சொல்வீர்கள்” என்றார்.

தமிழ் சினிமா தனது சினிமா அறிவுக்கும், திரைப்படங்கள் மீதான ஆர்வத்திற்கும் முக்கியமான உத்வேகமாக இருந்ததாகவும் நானி குறிப்பிட்டார். கமல்ஹாசன், மணிரத்னம், பாக்யராஜ், பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்களை தனது சினிமா பயணத்திற்கான இன்ஸ்பிரேஷனாக அவர் குறிப்பிட்டார்.

சென்னைக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் தனது திரைக் குடும்பத்திற்குத் திரும்பி வந்தது போன்ற உணர்வு ஏற்படுவதாகக் கூறிய நானி, தமிழ் ரசிகர்கள் தன் மீது தொடர்ந்து காட்டி வரும் அன்பையும் குறிப்பிட்டார். அதனால்தான் தனது திரைப்படத்திற்கான தமிழ் பின்னணி குரலை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

‘தி பாரடைஸ்’ தனது திரையுலகப் பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் என்றும், இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாகவும் நானி கூறினார். “24-ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது. அடுத்த முறை ‘தி பாரடைஸ்’ படத்தை விளம்பரப்படுத்த சென்னைக்கு வரும்போது, என்னை ‘ஜடல்’ என்ற கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி ரசிகர்கள் அழைப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் நடிகர் நானி ஆகியோர் பதிலளித்தனர். மேலும், சென்னையில் உள்ள நானியின் ரசிகர்களுக்காக ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கான முதல் டிக்கெட்டையும் நானி அறிமுகப்படுத்தினார்.

மாஸ் ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’, வரும் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.