“இசைக்கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை!” – ஹிப்ஹாப் தமிழா ஆதி

6

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இசை, இளமைத் துடிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘ஆதி போடி’ மற்றும் ‘கலைவாணியே’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ‘கலைவாணியே’ படத்தின் ஐந்தாவது பாடலாக வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி, இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். தனது திரைப்பயணத்தில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

‘மீசைய முறுக்கு’ முதல் பாகத்திற்கும், ‘மீசைய முறுக்கு 2’ படத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி பேசிய ஆதி, முதல் படம் தனது சொந்த வாழ்க்கையை மையமாகக் கொண்ட biopic தன்மை கொண்ட படமாக இருந்ததாகவும், இரண்டாம் பாகம் அதைவிட விரிவான மற்றும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய கதையாக உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

“‘மீசைய முறுக்கு 2’ இசை மற்றும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையை தங்களுடைய வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது” என்று ஆதி தெரிவித்தார்.

குறிப்பாக கானா இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கை இப்படத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் போராட்டங்களையும் பாடல்களாக வெளிப்படுத்தி, அதன் மூலம் வாழ்க்கையை நடத்தும் கானா கலைஞர்களின் உலகம் படத்தின் முக்கியமான பகுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

‘மீசைய முறுக்கு’ முதல் பாகத்தில் மறைந்த நடிகர் விவேக் ஆதி கதாபாத்திரத்தின் தந்தையாக நடித்திருந்தார். அவரைப் பற்றி பேசிய ஆதி, விவேக் அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில், ‘மீசைய முறுக்கு 2’ மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதை என்பதால், இதில் முக்கியமான தந்தை கதாபாத்திரம் இடம்பெறுவதாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு பாபா பாஸ்கர் சரியான தேர்வாக இருப்பார் என்று தான் கருதியதாகவும் தெரிவித்தார்.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பாபா பாஸ்கர் சற்று தயக்கம் காட்டியதாகவும், பின்னர் தன்னை நம்பி அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவும் ஆதி கூறினார். இப்படத்திற்குப் பிறகு பாபா பாஸ்கர் தமிழ் சினிமாவில் நடிகராக தனக்கென குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுவார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இப்படத்தில் கேத்திகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார் மற்றும் ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக கேத்திகா சர்மா, பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் லைலா சிங்என்ற நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசை, நடனம், காதல் மற்றும் லட்சியம் என வெவ்வேறு உலகங்களை ஒன்றிணைக்கும் வகையில் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

படத்தில் யோகி பாபு, நாசர், கருணாஸ், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹர்ஷத் கானின் காமெடி கதாபாத்திரத்திற்கு யோகி பாபு வழங்கிய ஆதரவை ஆதி குறிப்பாக பாராட்டியுள்ளார். மேலும், சைத்ரா ஆச்சார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், தமிழைக் கற்று தனது காட்சிகளுக்கு தானே டப்பிங் செய்துள்ளதாகவும் ஆதி தெரிவித்துள்ளார்.

‘மீசைய முறுக்கு 2’ படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்குநர், நாயகன், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, ஃபென்னி ஆலிவர் மற்றும் திருமலை ராஜன் ஆர்.ஆர். படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். வி.எஸ். தினேஷ் குமார் கலை இயக்குநராகவும், ஆக்ஷன் சந்தோஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நடிகர் மற்றும் இயக்குநர் பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாகவிருப்பதால், முதல் பாகத்தை ரசித்த ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் புரமோஷன் பயணம் கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. ரசிகர்களை நேரடியாகச் சந்திக்கும் வகையில் இந்த புரமோஷன் பயணம் அமையவுள்ளது.

தனது திரைப்பயணம் குறித்து பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி, கனவுகளுடன் மட்டுமே திரைத்துறைக்குள் வந்ததாகவும், தனது பயணத்தில் தன்னை ஆதரித்த, விமர்சித்த, கேள்வி எழுப்பிய மற்றும் ஊக்கப்படுத்திய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர் சுந்தர்.சி மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோரின் ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இசை, கானா கலைஞர்களின் வாழ்க்கை, காதல், நடனம் மற்றும் கனவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. “தியேட்டரில் கச்சேரி” என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம், இசை ரசிகர்களையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களையும் திரையரங்குகளை நோக்கி அழைக்கத் தயாராகியுள்ளது.