மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமிவெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
சமூக அக்கறை சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருப்பதை குறிப்பிட்டு, கதாநாயகன் தக்க்ஷன் விஜய் மற்றும் படக்குழுவினரின் முயற்சிகளையும் முதலமைச்சர் பாராட்டியுள்ளார். மேலும், இப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட அவர், படக்குழுவினரின் பணியை வெகுவாக பாராட்டியதுடன், திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், ராம்கி மற்றும் நடிகைகள் பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா, அஷ்மிதா சிங் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தனர்.
துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது. “சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…” என்ற வரியுடன் வெளியான முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ஜி. எம். குமார், ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், அப்புக்குட்டி, அமுதவாணன், திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
புதுமுகங்களான பாலா மற்றும் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்துபாடல்களை எழுதியுள்ள நிலையில், அவருடைய வரிகளில் உருவான பாடல் ஒன்றை வைக்கம் விஜயலட்சுமிபாடியுள்ளார். படத்தின் பாடல்கள் திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான அம்சங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் சீயோன் ராஜா வித்தியாசமான கதை சொல்லும் பாணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘துரோகம் பழகு’ – இரண்டாவது பார்வையுடன் அடுத்த கட்ட பயணத்தைத் தொடங்குகிறது!

