அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், நடிகை ராஷ்மிகா மந்தானா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படம் ‘மைசா’. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
“நான் சோர்ந்துவிட்டேன்… நான் நின்றுவிட்டேன்… நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் டீசர் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக, சமூகத்தின் பல்வேறு தடைகளையும் எதிர்ப்புகளையும் தகர்த்து, எதற்கும் பின்வாங்காமல் போராடும் துணிச்சலான பெண்ணாக ராஷ்மிகா சித்தரிக்கப்படுகிறார். போராட்டத்தில் களமிறங்கும் அவர், ஒரு சாதாரண போராளியாக மட்டுமல்லாமல், போரின் போக்கையே மாற்றும் சக்தியாக உருவெடுப்பது போல் டீசர் காட்சிகள் அமைந்துள்ளன.
இப்படத்தில் ராஷ்மிகா கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் தீவிர உடற்பயிற்சி மற்றும் சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். கதாபாத்திரத்தின் உடல்மொழி மற்றும் தோற்றத்திற்காகவும் அவர் சிறப்பு தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பைக் ஓட்டும் காட்சிகள் முதல் ஆபத்தான நீருக்கடியிலான சண்டைக் காட்சிகள் வரை பல்வேறு அதிரடி காட்சிகளில் ராஷ்மிகா துணிச்சலுடன் நடித்துள்ளார். குறிப்பாக, நீருக்கடியில் கையில் அரிவாளுடன் அவர் அமர்ந்திருக்கும் காட்சி டீசரின் கவனம் ஈர்க்கும் காட்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
இயக்குநர் ரவீந்திரா புல்லே உருவாக்கியுள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தை டீசர் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. படத்தின் உணர்வையும் கதையின் தீவிரத்தையும் ஒருசேர கடத்தும் வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிரடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுடன், படத்தின் இருண்ட பின்னணியையும் டீசர் உணர்த்துகிறது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணா படத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை தனது ஒளிப்பதிவு மூலம் திரையில் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக நீருக்கடியில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள பின்னணி இசை, படத்தின் தீவிரமான கதைக்களத்திற்கும் அதிரடி காட்சிகளுக்கும் கூடுதல் வலு சேர்க்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சண்டைப் பயிற்சியாளர் கெச்சாவடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகளும் டீசரில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இயல்பான சண்டை அசைவுகளுடன், விறுவிறுப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன.
ராஷ்மிகா மந்தானாவுடன் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், சிவா கந்துகுரி, கார்த்திக் ரஞ்சனி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே எழுதி இயக்கும் இப்படத்தை அஜய் சாய்ரெட்டி, அனில் சையபுரெட்டி மற்றும் வீரசாய் கோபா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். கெச்சா சண்டைப் பயிற்சியை கவனிக்கிறார்.
ராஷ்மிகாவின் இதுவரை காணாத அதிரடி அவதாரம், பிரம்மாண்டமான காட்சியமைப்பு, விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் மற்றும் தீவிரமான பின்னணி இசை ஆகியவற்றுடன் வெளியாகியுள்ள ‘மைசா’ டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள ‘மைசா’, நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.