லோகேஷ் கனகராஜ் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘RX’… ஃபர்ஸ்ட் லுக் & செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு!

8

இந்திய சினிமாவில் கவனம் ஈர்த்த படைப்பாளியான இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸும் முதன்முறையாக இணைந்து தமிழில் புதிய திரைப்படத்தைத் தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ‘ஆர்.எக்ஸ் – RX’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ (Bomb) ஆகிய திரைப்படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். இதில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை ஹரிஹரன் ராஜு எழுதியுள்ளார்.

ட்ராமா திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்க, ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மனோஜ் குமார் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார்.

ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் சார்பில் லோகேஷ் கனகராஜ், நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தீபாவளி திருநாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதையின் நாயகியான ரெஜினா கசாண்ட்ரா முகக்கவசம் அணிந்து தீர்க்கமான பார்வையுடன் தோன்றுகிறார். அதேபோல், செகண்ட் லுக் போஸ்டரில் ரயிலில் பயத்துடன் பயணிப்பது போன்ற அவரது தோற்றம் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

மேலும், ‘RX’ என்ற தலைப்பும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. மருத்துவர்கள் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டுகளில் இடம்பெறும் ‘RX’ என்ற குறியீடு, இப்படத்தின் கதைக்களம் மருத்துவத் துறையைச் சார்ந்ததாக இருக்குமோ அல்லது மெடிக்கல் மாஃபியாவை மையமாகக் கொண்ட திரில்லர் கதையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், படத்தின் உண்மையான கதைக்களம் குறித்த தகவல்களைப் படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, ‘RX’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்களும் திரை ஆர்வலர்களும் காத்திருக்கின்றனர்.