35 சர்வதேச திரைப்பட விழாக்கள்… 4 விருதுகள்! இயக்குநராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ‘வன மடி’!
“2D திரையிலிருந்து 3D இயற்கைக்குத் திரும்புங்கள்!” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகத்துடன் உருவாகியுள்ள ‘வன மடி’ திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது. சென்டர் சீட் சினிமாஸ் (Center Seat Cinemas) சார்பில் விஜயராகவன் தயாரிக்க, ஞானம் சுப்பரமணியனின் நிர்வாக மேலாண்மையில் இப்படம் உருவாகியுள்ளது.
‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘புகைப்படம்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் ஆம்ஸ்ட்ராங், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். முற்றிலும் புதிய நடிகர்களைக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு அவரே திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
வேகமாக மாறிவரும் காலச்சூழல் மனிதர்களையும், எதிர்காலத் தலைமுறைகளையும் வலிமையான சுழற்சிக்குள் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. மனிதர்களுக்குள் இயல்பாக இருக்க வேண்டிய அன்பும், தேடலும் இயந்திர வாழ்க்கைக்குள் மறைந்து போய்விட்டன என்பதை எளிமையான மொழியில் பேசுவதே ‘வன மடி’ திரைப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. இயற்கையின் முக்கியத்துவத்தையும், மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவையும் உணர்த்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு அமெரிக்காவில் வசிக்கும் ராலே ராஜன் இசையமைத்துள்ளார். அமெரிக்காவில் தமிழ்ச் செய்யுள்கள் பலவற்றை இசை வடிவமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வரும் இவர், ‘வன மடி’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான பாடல் ஒன்றை பிரபல பின்னணிப் பாடகி மால்குடி சுபா பாடியுள்ளார். அதேபோல், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் வெற்றியாளரான கிரிஷாங், இப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். சூர்யா மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் உணர்ச்சிப்பூர்வமான ‘ஆரிராரோ ஆரிரோ’ பாடலைப் பாடியவர்தான் கிரிஷாங் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் பாடல்களை ரமேஷ் வைத்யா எழுதியுள்ளார். ‘அழகு குட்டி செல்லம்’, ‘லால் சலாம்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார்.
முழுமையாகத் தயாராகியுள்ள ‘வன மடி’ திரைப்படம், இதுவரை சுமார் 35 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 7 திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ள இப்படம், 4 விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளையும் வென்றுள்ளது. மற்ற விருதுகளுக்கான அறிவிப்புகள் வெளியாக வேண்டியுள்ள நிலையில், அடுத்ததாக நவம்பர் மாதம் கோவாவில் நடைபெறவுள்ள இந்தியன் பனோரமாவிலும் இப்படம் பங்கேற்க உள்ளது.
இப்படம் குறித்து இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் ஆம்ஸ்ட்ராங் கூறுகையில், “இப்படம் இயற்கையைச் சார்ந்த கதை. தாய் மடி என்பது போல ‘வன மடி’ என்ற பெயரை வைத்துள்ளோம். இந்தப் படம் எதிர்காலத் தலைமுறையினருக்கானது மட்டுமல்ல; குறிப்பாக அனைத்துப் பெற்றோர்களுக்குமான படமாகவும் இருக்கும். சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் முக்கிய கவனம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆறு முறை தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பி. லெனின் இப்படத்தைப் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், தனது தந்தையும் இயக்குநருமான பீம்சிங்கின் ‘புத்தா பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை வெளியிட முன்வந்துள்ளார். இதுவே இப்படத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த விருதாக நான் கருதுகிறேன். ‘வன மடி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது” என்றார்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வன மடி’, சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்றுள்ள அங்கீகாரத்தைத் தொடர்ந்து, விரைவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.