‘மார்கோ’ திரைப்படத்தின் மூலம் பான் இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகர் உன்னி முகுந்தன், தனது 50வது திரைப்படத்தில் புதிய பொறுப்பை ஏற்கிறார். தேசிய விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ், உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து புதிய மலையாள திரைப்படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் மூலம் உன்னி முகுந்தன் முதன்முறையாக எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என்ற பொறுப்பையும் ஏற்கிறார். அதிரடியும் விறுவிறுப்பும் நிறைந்த கதைக்களத்தில் உருவாகும் இப்படம், பான் இந்திய அளவில் ரசிகர்களை சென்றடையும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது.
குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘ஓம்காரா’, ‘ஸ்பெஷல் 26’, ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ரெய்டு’, ‘ஷைத்தான்’ மற்றும் ‘த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடர் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களை தயாரித்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்நிறுவனம், இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிஷேக் பதக் இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘த்ரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படத்தை இயக்கி, தயாரித்தும் வருகிறார். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மறுபுறம், ‘மார்கோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முக்கியமான பான் இந்திய நட்சத்திரங்களில் ஒருவராக கவனம் பெற்றுள்ளார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வரும் அவர், தனது உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘மேப்படியான்’ திரைப்படம் தேசிய விருதை வென்றது. இதன் மூலம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என இரு தளங்களிலும் உன்னி முகுந்தனின் பயணம் மேலும் முக்கியத்துவம் பெற்றது. தற்போது பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் அவர் இணைந்திருப்பது இந்தப் புதிய திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும், உன்னி முகுந்தனின் 50வது திரைப்படம் என்பதால் இப்படம் அவரது திரைப்பயணத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. தனது சொந்தக் கதையை இயக்க வேண்டும் என்ற நீண்டநாள் விருப்பத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கத் பதக் கூறுகையில், உன்னி முகுந்தனுடன் இணைந்து மலையாள திரைப்படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அவர் தன்னை ஒரு வலுவான பான் இந்திய நட்சத்திரமாக நிலைநிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பாக, தனது 50வது திரைப்படத்தில் எழுத்து மற்றும் இயக்கப் பொறுப்புகளை உன்னி முகுந்தன் ஏற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பனோரமா ஸ்டுடியோஸ் நிர்வாக இயக்குநர் அபிஷேக் பதக், உன்னி முகுந்தனின் சமீபத்திய திரைப்படங்களையும் அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களையும் தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். ‘மேப்படியான்’ முதல் ‘மார்கோ’ வரை வெவ்வேறு கதைக்களங்களிலும் மாறுபட்ட முயற்சிகளிலும் ஈடுபட அவர் தயாராக இருப்பது தன்னை கவர்ந்ததாகவும், அதனால் இந்தத் திரைப்படத்தை இணைந்து உருவாக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது 50வது திரைப்படம் குறித்து உன்னி முகுந்தன் கூறுகையில், “எனது ஐம்பதாவது திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பானது. அதை எழுதி, இயக்குவது எனக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்துள்ளது. எனது சொந்தக் கதைகளை சொல்ல வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்துள்ளது. அதற்கான சரியான கதையும், சரியான தருணமும் இதுதான் என்று உணர்ந்தேன். குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இந்தத் திரைப்படம் பல்வேறு மொழிகளைப் பேசும் ரசிகர்களையும் சென்றடையும்” என தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்து வரும் உன்னி முகுந்தன், தனது 50வது திரைப்படத்தில் நடிகர் என்ற அடையாளத்தைக் கடந்து எழுத்தாளர் மற்றும் இயக்குநராகவும் களமிறங்குவதால் இப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையவுள்ளது.
இப்படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் படப்பிடிப்பு குறித்த முழுமையான விவரங்கள்விரைவில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
