தமிழில் சுயாதீன இசைக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காதல், காதல் தோல்வி, நகைச்சுவை மற்றும் துள்ளலான இசையை வித்தியாசமான முறையில் இணைத்து உருவாகியுள்ள புதிய பாடல் ‘விட்ரா மச்சா’ வெளியாகியுள்ளது.
ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ரூபேஷ் திவாரி இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். துள்ளலான இசை, நகைச்சுவை கலந்த வரிகள் மற்றும் எதிர்பாராத திருப்பம் ஆகியவற்றுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல், வழக்கமான காதல் தோல்விப் பாடல்களில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளது.
ஒரு இளம் காதல் ஜோடிக்கு இடையேயான தொலைபேசி உரையாடலுடன் பாடல் தொடங்குகிறது. அந்த உரையாடலின்போது கதாநாயகி ‘பிரேக்’ என்று கூறுகிறார். ஆனால், அவர் தனது வார்த்தையை முழுமையாக முடிப்பதற்குள் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் கதாநாயகன், தனது காதலி ‘பிரேக் அப்’என்று கூறியதாக தவறாக புரிந்துகொள்கிறார்.
காதல் உறவு முடிந்துவிட்டதாக நினைக்கும் கதாநாயகன் சோகத்தில் மூழ்க, அந்தத் தவறான புரிதலைச் சுற்றியே பாடலின் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கின்றன. காதல் தோல்வியால் அவன் வருத்தத்தில் இருக்கும் நிலையில், அவனது நண்பரோ இதை ஒரு நல்ல விஷயமாக எடுத்துக்கொண்டு, காதல் உறவிலிருந்து கிடைத்த புதிய சுதந்திரத்தை உற்சாகமாக கொண்டாடுகிறார்.
இதையடுத்து, பாடல் துள்ளலான குத்து இசையுடன் வேகமெடுக்கிறது. கதாநாயகனின் சோகமான மனநிலையை வெளிப்படுத்தும் வரிகளுடன், அவரது காதல் வாழ்க்கையைச் சுற்றிய நகைச்சுவை கலந்த பின்னோக்குக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. கதாநாயகனின் மனதில் இருக்கும் சோகத்திற்கும், பாடலின் உற்சாகமான இசைக்கும் இடையேயான முரண்பாடு பாடலுக்கு தனித்துவமான தன்மையை ஏற்படுத்துகிறது.
பாடலின் இறுதியில் எதிர்பாராத திருப்பமும் இடம்பெறுகிறது. கதாநாயகன் உண்மையிலேயே காதல் தோல்வியை சந்தித்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் காதலிக்கும் பெண் நேரில் வந்து சூழ்நிலையை தலைகீழாக மாற்றுகிறார். ஒரு வார்த்தையை முழுமையாகக் கேட்காமல் ஏற்பட்ட தவறான புரிதலே பாடலின் முக்கிய நகைச்சுவை திருப்பமாக மாறுகிறது.
இவ்வாறு காதல், வலி, நகைச்சுவை மற்றும் எதிர்பாராத திருப்பம் ஆகியவற்றை துள்ளலான இசையுடன் இணைத்து ‘விட்ரா மச்சா’ உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காதல் தோல்விப் பாடல்கள் சோகத்தை மையமாகக் கொண்டிருக்கும் நிலையில், அதே உணர்வை நகைச்சுவையுடன் அணுகியிருப்பது இந்தப் பாடலின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.
கிக்கர்ஸ் டான்ஸ் க்ரூ ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலுக்கு பிரதீப் நடன அமைப்பு செய்துள்ளார். மஹபூப் தயாரிப்பாளராகவும், முகின் ஜெயராஜ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். கேமரா பணிகளில் பாஸ்கர் யூனிட்ஸ் மற்றும் முவி மீடியா இணைந்துள்ளன.
ஹரிஷ் ராம் மற்றும் அவினாஷ் இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஆர்.ஜி. கிருஷ்ணா கலை இயக்குநராகவும், உதய் கிருஷ்ணமூர்த்தி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கிருபாராஜ் வண்ணக்கலவைப் பணிகளை கவனித்துள்ளார்.
கேட்டவுடன் ரசிக்க வைக்கும் துள்ளலான இசை, காதல் தோல்வியை வித்தியாசமாக அணுகும் கதைக்களம் மற்றும் இறுதியில் இடம்பெறும் எதிர்பாராத திருப்பம் என, ‘விட்ரா மச்சா’ சுயாதீன இசை ரசிகர்களுக்கான புதிய படைப்பாக உருவாகியுள்ளது.
ஏற்கனவே தெலுங்கு இசைச் சந்தையில் பிரபலமான கே மியூசிக் நிறுவனத்தின் தமிழ் இசை முத்திரை சார்பில் இப்பாடல் வெளியாகியுள்ளது.



