அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் சார்பில் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார். இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு ‘அன்பில் அவன்’ படத்தின் உருவாக்கம் மற்றும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் அபிநயா, “இந்தப் படத்தை உருவாக்க முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் கதைதான். கதை பிடித்துப் போய் இந்தப் படத்தைத் தொடங்கினோம். அந்த அளவிற்கு தரமான கதை இது. பின்னர் அதற்கேற்ற புத்திசாலித்தனமான குழுவும் அமைந்தது. அசோக் செல்வன் எனக்கு சகோதரர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட. ‘அன்பில் அவன்’ அன்பான தம்பதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அதிலிருந்து அவர்கள் எப்படி போராடி மீண்டு வருகிறார்கள் என்பதையும் சொல்லும் கதை. இந்தப் படத்தின் கதாநாயகன் போன்ற கணவர் நமக்கும் கிடைக்க மாட்டாரா என்று பலரும் ஆசைப்படும் வகையில் அந்தக் கதாபாத்திரம் இருக்கும்” என்றார்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் பேசிய கவிதா பாண்டியன், “இந்தப் படம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. படத்தில் நடித்தவர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் செய்துள்ள முயற்சிகளைப் பார்த்து வியந்தேன். அசோக் செல்வன் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்துள்ளார். அனைவரும் திரையரங்கிற்குச் சென்று இந்தப் படத்தைப் பாருங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
நடிகர் கௌதம் கார்த்திக், “படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது. அசோக் செல்வன் எனது நெருங்கிய நண்பர். அவருடன் பேசினாலே நமது பிரச்சினைகளை மறக்கச் செய்து விடுவார். இப்படம் பிரமாதமாக வந்திருக்கிறது. ஒலி அமைப்புகளும் சிறப்பாக உள்ளன” என்றார்.
திங்க் மியூசிக் நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷ் பேசுகையில், “அசோக் செல்வனின் முதல் படத்திலிருந்து அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு சிறப்பான இசையை வழங்கியுள்ளார். ‘ஆசை வரமே’, ‘கல்லா நிக்கிறியே’ உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தில் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் இருவரும் சிறப்பாக நடித்ததுடன் நடனமும் ஆடியுள்ளனர். கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும்” என்றார்.
படத்தொகுப்பாளர் ஆர்.கே. செல்வா பேசும்போது, “அசோக் செல்வன் மூலம் தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். நாங்கள் இருவரும் கல்லூரித் தோழர்கள். அசோக் செல்வனைப் போலவே ப்ரீத்தி முகுந்தனுக்கும் படத்தில் சமமான முக்கியத்துவம் உள்ளது. விக்னேஷ் ராஜா கதையை சிறப்பாக எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தாவின் இசையும் நன்றாக அமைந்துள்ளது” என்றார்.
ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், “என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் கார்த்திகேயனுக்கும், தயாரிப்பாளர் அபிநயாவுக்கும் நன்றி. பல்வேறு சோதனை முயற்சிகளில் ஈடுபட இயக்குநர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அசோக் செல்வனிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவர் கொடுத்த நம்பிக்கை என்னைச் சிறப்பாகப் பணியாற்ற வைத்தது” என்றார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “அசோக் செல்வன் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வளர்ந்து வருகிறார். அவரது ஒவ்வொரு முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள். 70 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக அவர் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அசோக் துணிச்சல் மிக்கவர். ப்ரீத்தி முகுந்தனும் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தப் படம் அவருக்கும் முக்கியமான படமாக அமையும். இன்னும் சில ஆண்டுகளில் அசோக் செல்வன் பான் இந்தியா அளவில் கவனம் பெறும் நடிகராக வருவார் என்று நம்புகிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் மிகவும் ரசித்து பணியாற்றிய படம் இது. இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படக்குழுவில் பல திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளனர். நம்பிக்கை அளிக்கும் தரத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது” என்றார்.
கதாசிரியரும் ‘போர் தொழில்’ பட இயக்குநருமான விக்னேஷ் ராஜா, இப்படத்தின் கதைக்கான விதை உருவான விதத்தைப் பகிர்ந்து கொண்டார். “வட இந்தியாவில் ஜெய்ப்பூர் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது பெய்த மழையால் ஏற்பட்ட ஒரு சம்பவம்தான் இந்தக் கதையின் முதல் விதை. இது ஒரு காதல் கதை. கனவு கண்ட வாழ்க்கையை வாழ நினைக்கும் தம்பதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை. அபிநயா, அசோக் செல்வன் ஆகியோருடன் இணைந்த பிறகு இயக்குநர் கார்த்திகேயன் வந்தார். நான் கற்பனை செய்ததைவிட படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.
மேலும், அசோக் செல்வனுடனான தனது நீண்டகால நட்பையும் அவர் நினைவுகூர்ந்தார். “அசோக் செல்வனை எனக்கு 15 ஆண்டுகளாகத் தெரியும். ஆரம்ப காலத்தில் இருவரும் சேர்ந்து பல விஷயங்களைப் பற்றி கனவு கண்டிருக்கிறோம். இன்று அவர் வளர்ந்து நிற்பதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது”என்றார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கதிர் பாலு, “படப்பிடிப்பிலேயே இந்தப் படம் சிறப்பாக வரும் என்று தெரிந்தது. கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன. சில காட்சிகள் மிகவும் சவாலான முறையில் படமாக்கப்பட்டுள்ளன. என்னைத் தேர்வு செய்த அசோக் செல்வன், அபிநயா மற்றும் இயக்குநருக்கு நன்றி” என்றார்.
மஹா டெல்லி கணேஷ், “படத்தில் சிரமமான காட்சிகளை எடுக்கும்போதும் ப்ரீத்தி முகுந்தன் எந்த அசௌகரியத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக நடித்தார். இயக்குநர் ஒவ்வொரு காட்சியையும் எங்களுக்கு தெளிவாக விளக்கினார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. அவருடன் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது” என்றார்.
நடிகர் சபுமோன் அப்துசமத், தமிழ்நாட்டில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “இந்தப் படத்தில் நாங்கள் குடும்பம் போல இணைந்து பணியாற்றினோம். படப்பிடிப்பின்போது பல சிரமங்களை எதிர்கொண்டாலும், படத்தைப் பார்க்கும்போது அந்த வலிகள் அனைத்தும் மறைந்துவிட்டன. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் மட்டுமல்ல, நல்ல நண்பர்களும் கிடைத்துள்ளனர். அனைவரின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை” என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பேசுகையில், “இந்தப் படம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானது. 34 ஆண்டுகால எனது அனுபவத்தில் இந்த மாதிரியான உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. இந்தப் படத்தை எனது சொந்தப் படம் போல நினைத்து பணியாற்றினேன். அசோக் செல்வன் எனக்கு சகோதரர் போல் ஆகிவிட்டார். 45 நாட்களுக்கு வேறு எந்தப் பணியையும் ஏற்காமல் இந்தப் படத்துக்காக முழுமையாக பணியாற்றினேன். இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எதிர்பாராத விருந்தாக இருக்கும்” என்றார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், “விக்னேஷ் ராஜாவுடன் நாங்கள் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்தப் படத்தின் கதை மிகவும் முக்கியமானது. சண்டைக் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் பெரிய பலமாக இருந்திருக்கிறார். அதேபோல் கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அசோக் செல்வன் சினிமாவை நேசிப்பவர், மதிப்பவர். அவருடைய வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவும் அசோக் செல்வனுடனான தனது நீண்டகால நட்பை நினைவுகூர்ந்து, “‘தெகிடி’ படத்தில் அசோக் செல்வனுடன் பணியாற்றியது நினைவுக்கு வருகிறது. இன்று அவர் வளர்ந்து நிற்பதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசும்போது, “இந்தப் படத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. விக்னேஷ் ராஜா இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. அவர் கொடுத்த கதைதான் இந்தப் படத்தின் அடிப்படை. அபிநயா நல்ல கதைகளைத் தேர்வு செய்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். அசோக் செல்வன் படத்தின் உருவாக்கத்தில் ஒரு உதவி இயக்குநரைப் போலவே ஈடுபாட்டுடன் இருந்தார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இந்தப் படத்துக்காக 40 நாட்களுக்கும் மேலாக பணியாற்றியது சாதாரணமான விஷயம் அல்ல. குறிப்பாக கடைசி 30 நிமிடங்கள் அவரது உழைப்பு அதிகமாகத் தெரியும். கோவிந்த் வசந்தா சிறப்பான பாடல்களையும் இசையையும் வழங்கியுள்ளார். ப்ரீத்தி முகுந்தன் மிகவும் உற்சாகமான நடிகை. எப்போதும் தன்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்பவர்” என்றார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன், “அபிநயா எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்தார். அசோக் செல்வனும் அபிநயாவும் என்னைத் தங்களது குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டு வழிகாட்டினர். அசோக் செல்வனுடன் இணைந்து நடித்தது அற்புதமான பயணம். அவர் இந்தப் படத்தில் நடிப்பில் ஒரு பெரிய உயரத்திற்குச் சென்றுள்ளார். அதே நேரத்தில் எனக்கும் சிறப்பாக நடிக்க நிறைய இடம் கொடுத்தார். இயக்குநர் கார்த்திகேயன் என்னை முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்த வைத்தார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் இயக்கத்தில் நடித்தது பெருமையாக இருந்தது. கோவிந்த் வசந்தாவின் பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன” என்றார்.
இறுதியாக பேசிய படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான அசோக் செல்வன், “இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு எனது நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது. சினிமா என்பது ஏதோ செய்துவிட்டு செல்வது அல்ல. ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் ஆகியவற்றைத் தேர்வு செய்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தில் எனக்கு பல நண்பர்களும், பல புதிய அனுபவங்களும் கிடைத்துள்ளன” என்றார்.
மேலும், படத்தின் உருவாக்கத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பையும் அவர் நினைவுகூர்ந்தார். “படத்தின் பட்ஜெட் அதிகரித்தபோதும் எனது பெற்றோர் எனது கனவுக்கு ஆதரவாக இருந்தார்கள். அக்கா எனக்கு பலமாக இருந்தார். இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியதில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் பங்களிப்பு மிகப்பெரியது. ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்துள்ளார். மகா, கதிர் போன்ற திறமையான நடிகர்களை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இந்தப் படம் உலகின் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்கு அனுபவத்தை வழங்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்”என்றார்.
அன்பு, உறவு, தம்பதியினரின் வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கல்கள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’, வித்தியாசமான கதைக்களத்துடன் திரையரங்கில் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது.





