மகாபாரத இதிகாசத்தின் மாவீரனும், பெருங்காப்பியத் தலைவனுமான கர்ணனின் காவியம் தற்போது பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகவுள்ளது. ராகவா லாரன்ஸ் மகாவீர் கர்ணனாக நடிக்க, இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘மஹாவீர் கர்ணா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பென் மூவீஸ் (PEN MOVIES) நிறுவனத்தின் ஜெயந்திலால் கடா வழங்கும் இப்படத்தை, ஆர்வி ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றன. சுமார் ரூ.150 கோடி பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
மகாபாரதத்தில் கௌரவம், விசுவாசம், தியாகம் மற்றும் விதி ஆகியவற்றால் வரையறுக்கப்படும் கர்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகிறது. கர்ணனின் வீரத்தையும், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற உணர்வுப்பூர்வமான தருணங்களையும் பிரம்மாண்டமான திரை அனுபவமாகக் கொண்டுவர இயக்குநர் ரமேஷ் வர்மா திட்டமிட்டுள்ளார்.
படத்தின் காட்சியமைப்பிற்காக பிரம்மாண்டமான பிரத்யேக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. புராண காலத்தை கண்முன் நிறுத்தும் வகையில் கலை வடிவமைப்புகள் உருவாக்கப்படுவதுடன், பிரம்மாண்டமான அரச அரண்மனைகள், பழங்கால போர்க்களங்கள் மற்றும் மிகப்பெரிய போர் காட்சிகள் உள்ளிட்டவை படமாக்கப்பட உள்ளன.
மேலும், பிரம்மாண்டமான அரங்குகளுடன் உலகத்தர VFX தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டு, கர்ணனின் உலகத்தை ரசிகர்களுக்கு பிரமிக்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவை இப்படத்தின் முக்கிய அம்சங்களாக அமைய உள்ளன.
மகாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதிகாசத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றான கர்ணனை அவர் ஏற்று நடிப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கர்ணனின் வீரத்தையும், உணர்வுகளையும், விதியுடனான அவரது போராட்டத்தையும் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்த ராகவா லாரன்ஸ் தயாராகி வருகிறார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அறிவிப்பும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
“ஒரு மாவீரன். ஒரு இதிகாச நாயகன். ஒரு பெருங்காப்பியத் தலைவன்” என்ற அடையாளத்துடன் உருவாகும் ‘மஹாவீர் கர்ணா’, இந்திய சினிமாவில் கர்ணனின் காவியத்தை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகிறது.
ராகவா லாரன்ஸ் – ரமேஷ் வர்மா கூட்டணியில், ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படம் 2027-ம் ஆண்டு உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.
